< Back
தேசிய செய்திகள்
தமிழகத்துக்கு தண்ணீர் திறப்பதை கண்டித்துமண்டியாவில் கன்னட அமைப்பினர் கண்டன ஊர்வலம்
தேசிய செய்திகள்

தமிழகத்துக்கு தண்ணீர் திறப்பதை கண்டித்துமண்டியாவில் கன்னட அமைப்பினர் கண்டன ஊர்வலம்

தினத்தந்தி
|
9 Oct 2023 12:00 PM IST

தமிழகத்துக்கு தண்ணீர் திறப்பதை கண்டித்து மண்டியாவில் கன்னட அமைப்பினர் கண்டன ஊர்வலம் நடத்தினர். அப்போது இடர்பாட்டு சூத்திரம் வகுக்க மத்திய அரசை வலியுறுத்தினர்.

மண்டியா:

காவிரியில் தண்ணீர் திறப்பு

காவிரி மேலாண்மை ஆணைய உத்தரவின்பேரில் காவிரியில் தமிழகத்துக்கு தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து கர்நாடகத்தில் விவசாயிகள், கன்னட அமைப்பினர் தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகிறார்கள். குறிப்பாக காவிரியின் மையப்பகுதியான மண்டியா மற்றும் மைசூரு மாவட்டங்களில் தொடர்ந்து பெரிய அளவில் போராட்டங்கள் நடந்து வருகிறது.

மண்டியா டவுனில் கலெக்டர் அலுவலகம் எதிரே உள்ள சர் எம்.விசுவேஸ்வரய்யா பூங்காவில் விவசாய சங்கத்தினர் தொடர்ந்து 36-வது நாளாக நேற்றும் போராட்டம் நடத்தினர். அவர்களுக்கு பல்வேறு அமைப்பினரும், சங்கங்களும் ஆதரவு தெரிவித்து வருகிறார்கள்.

கண்டன பேரணி

இந்த நிலையில் காவிரியில் தமிழகத்துக்கு தண்ணீர் திறந்து விட்டதை கண்டித்து நேற்று மண்டியா டவுனில் கர்நாடக விஜயசேனா என்ற கன்னட அமைப்பினர் கண்டன பேரணி நடத்தினர். இதில் பெண்கள் உள்பட அமைப்பை சேர்ந்த நூற்றுக்கணக்கானோர் கலந்துகொண்டனர். அவர்கள் சில்வர் ஜூப்ளி பூங்காவில் இருந்து ஊர்வலத்தை தொடங்கினர். மேலும் விசுவேஸ்வரய்யா பூங்காவுக்கு சென்று அங்கு உள்ளிருப்பு போராட்டம் நடத்தி வரும் விவசாயிகளுக்கு ஆதரவு தெரிவித்து கலந்துகொண்டனர்.

அப்போது அவர்கள் மத்திய அரசுக்கு எதிராகவும், மாநில அரசுக்கு எதிராகவும், காவிரி மேலாண்மை ஆணையத்துக்கு எதிராகவும் கோஷம் எழுப்பினர். ேமலும் காவிரியில் தண்ணீர் திறப்பதை உடனடியாக நிறுத்த வேண்டும் என்றும் வலியுறுத்தினர்.

இடர்பாட்டு சூத்திரம்

அப்போது அவர்கள் கூறுகையில், கர்நாடகத்தின் நலனை மறந்து அண்டை மாநிலத்துக்கு தண்ணீர் திறந்து நமது விவசாயிகளின் எதிர்காலத்தை அரசு பாழாக்கி வருகிறது. பெங்களூரு உள்ளிட்ட பகுதிகளுக்கு குடிநீருக்கே தண்ணீர் இல்லாத நிலை ஏற்பட போகிறது. இந்த நெருக்கடியான நேரத்தில் பிரதமர் மோடி இதில் தலையிட்டு, காவிரி விவகாரத்தில் இடர்பாட்டு சூத்திரத்தை வகுக்க வேண்டும். மேலும் மேகதாது திட்டத்துக்கும் விரைவில் அனுமதி அளித்து, அணை கட்ட ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்.

காவிரி விவகாரத்தில் எந்த கட்சி ஆட்சியில் இருந்தாலும் மாநிலத்துக்கு அநீதி தான் ஏற்பட்டு வருகிறது. அரசியல்வாதிகள் காவிரி விவகாரத்தல் நாடகமாடி வருகிறார்கள். நமக்கு குடிநீருக்கே தண்ணீர் பற்றாகுறையாக இருக்கும்போது, அண்டை மாநிலத்துக்கு 3-ம் போக விவசாயத்துக்கு தண்ணீர் கொடுப்பது நியாயமல்ல. இதனால் கர்நாடக அரசு தண்ணீர் திறப்பதை உடனடியாக நிறுத்த வேண்டும் என்றனர்.

மேலும் செய்திகள்