மணிப்பூர் கலவரத்தை கண்டித்து உப்பள்ளியில் கிறிஸ்தவ அமைப்பினர் போராட்டம்
|மணிப்பூர் கலவரத்தை கண்டித்து உப்பள்ளியில் கிறிஸ்தவ அமைப்பினர் போராட்டம் நடத்தினர்.
உப்பள்ளி-
மணிப்பூரில் கடந்த 2 மாதங்களாக கலவரம் நீடித்து வருகிறது. இந்த கலவரத்தில் இளம்பெண்களை நிர்வாணமாக்கி அழைத்து செல்லும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானது. இந்த சம்பவம் நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த சம்பவத்தை கண்டித்து நாடு முழுவதும் போராட்டம் நடந்து வருகிறது. எதிர்க்கட்சிகள் நாடாளுமன்றத்தை புறக்கணித்து வருகிறார்கள்.
இந்தநிலையில், நேற்று தார்வார் மாவட்டம் உப்பள்ளியில் கிறிஸ்தவ அமைப்பினர் 500-க்கும் மேற்பட்டோர் அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவித்தனர். அங்கிருந்து அவர்கள் ஊர்வலமாக மாநகராட்சி ரோடு வழியாக மினி விதானசவுதாவில் உள்ள தாசில்தார் அலுவலகம் வரை சென்றனர். பின்னர் தாசில்தார் அலுவலகத்தை கிறிஸ்தவ அமைப்பினர் முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். அப்போது ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டவர்கள் கூறுகையில், கடந்த 2 மாதங்களாக மணிப்பூர் மாநிலமே எரிந்து கொண்டு இருக்கிறது. கலவரத்தை கட்டுப்படுத்த முடியாமல் மத்திய அரசு திணறி வருகிறது.
மணிப்பூரில் பா.ஜனதாவிற்கு ஆதரவு தரும் பிரிவினரை தவிர கிறிஸ்தவ மற்றும் இதர பிரிவினர் மீது தாக்குதல் சம்பவம் நடந்து வருகிறது. எனவே அங்குள்ள மக்களை பாதுகாத்து கலவரத்தை கட்டுக்குள் கொண்டு வர மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும், என்றனர்.