< Back
தேசிய செய்திகள்
தமிழகத்துக்கு காவிரி நீர் திறக்க எதிர்ப்பு: மண்டியா, மத்தூரில் முழுஅடைப்பு
தேசிய செய்திகள்

தமிழகத்துக்கு காவிரி நீர் திறக்க எதிர்ப்பு: மண்டியா, மத்தூரில் முழுஅடைப்பு

தினத்தந்தி
|
24 Sept 2023 12:15 AM IST

தமிழகத்துக்கு காவிரி நீர் திறப்பதை கண்டித்து மண்டியா, மத்தூரில் நேற்று முழுஅடைப்பு போராட்டம் நடந்தது. இதனால் கடைகள், பள்ளிகள் மூடப்பட்டன. மேலும் ஆட்டோக்கள், பஸ்கள் ஓடவில்லை.

மண்டியா:

கர்நாடக மாநிலம் குடகில் உள்ள தலைக்காவிரியில் காவிரி ஆறு உற்பத்தியாகிறது. இந்த காவிரி ஆறு கர்நாடகம்-தமிழகத்துக்கு ஜீவாதாரமாக திகழ்கிறது. காவிரி நீரை பங்கிட்டு கொள்வதில் தமிழகம், கர்நாடகம் இடையே நீண்ட காலமாக பிரச்சினை இருந்து வருகிறது. பருவமழை பொய்க்கும் போதெல்லாம் இரு மாநிலங்கள் இடையே காவிரி பிரச்சினை தலைத்தூக்குகிறது. தற்போதும் கர்நாடகத்தில் பருவமழை பொய்த்து போனதால், இரு மாநிலங்களில் இடையே மீண்டும் காவிரி நீர் பிரச்சினை எழுந்துள்ளது.

காவிரி ஒழுங்காற்று குழு கடந்த 12-ந்தேதி பரிந்துரை செய்த நிலையில், காவிரியில் 15 நாட்களுக்கு வினாடிக்கு 5 ஆயிரம் கனஅடி தண்ணீர் திறக்கும்படி கடந்த 18-ந்தேதி காவிரி மேலாண்மை ஆணையம் கர்நாடக அரசுக்கு உத்தரவிட்டது. சுப்ரீம் கோர்ட்டும் காவிரி மேலாண்மை ஆணைய உத்தரவில் தலையிட மறுத்துவிட்டது. இதனால், காவிரியில் தமிழகத்துக்கு தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது.

இதனால் கர்நாடகத்தில் பல பகுதிகளில் போராட்டம் வெடித்துள்ளன. காவிரியின் மையப்பகுதியான மண்டியா, மைசூரு, சாம்ராஜ்நகர், ராமநகர் மற்றும் தலைநகர் பெங்களூரு உள்ளிட்ட பகுதிகளில் விவசாயிகள், கன்னட அமைப்பினர் தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகிறார்கள். எதிர்க்கட்சிகளான பா.ஜனதாவும், ஜனதாதளம்(எஸ்) கட்சிகளும் மாநில காங்கிரஸ் அரசுக்கு எதிராக போராட்டம் நடத்தி வருகிறார்கள்.

இந்த நிலையில், தமிழகத்துக்கு காவிரி நீர் திறப்பதை கண்டித்து கிருஷ்ணராஜ சாகர் (கே.ஆர்.எஸ்.) அணை அமைந்துள்ள மண்டியா மாவட்டத்தில் 23-ந்தேதி (அதாவது நேற்று) முழுஅடைப்பு போராட்டத்துக்கு மாவட்ட விவசாய நலச்சங்கத்தினர் அழைப்பு விடுத்தனர். இந்த முழுஅடைப்பு போராட்டத்துக்கு பல்வேறு விவசாய சங்கம் மற்றும் கன்னட அமைப்பினர் ஆதரவு தெரிவித்தனர்.

இந்த நிலையில் திட்டமிட்டப்படி மண்டியா நகரில் நேற்று முழுஅடைப்பு போராட்டம் நடந்தது. இதேபோல், மத்தூர் நகரிலும் விவசாய அமைப்பு சார்பில் முழுஅடைப்பு போராட்டம் நடந்தது. மண்டியா, மத்தூர் நகரில் நடந்த முழுஅடைப்பு போராட்டத்துக்கு வியாபாரிகள் சங்கம், ஓட்டல், பெட்ரோல் விற்பனை நிலைய உரிமையாளர்கள், ஆட்டோ ஓட்டுநர்கள், தனியார் பஸ் உரிமையாளர்கள், லாரி உரிமையாளர்கள் சங்கங்கள் உள்பட பல்வேறு ஆதரவு தெரிவித்துள்ளன. மேலும் முழுஅடைப்புக்கு ஆதரவாக சில தனியார் கல்வி நிறுவனங்களும் மாணவர்களுக்கு விடுமுறை அறிவித்துள்ளன.

இதனால் நேற்று மண்டியா நகரில் கடைகள் எதுவும் திறக்கப்படவில்லை. தொழில் நிறுவனங்கள் மூடப்பட்டன. பெட்ரோல் விற்பனை நிலையங்கள் திறக்கவில்லை. ஆட்டோ, தனியார் பஸ்களும் ஓடவில்லை. வணிக வளாகங்களும் மூடப்பட்டன. தியேட்டர்களும் திறக்கவில்லை. நகரில் திறக்கப்பட்ட சில கடைகளும் கன்னட அமைப்பினரின் வேண்டுகோளை ஏற்று மூடப்பட்டது. இதனால் நேற்று மண்டியா நகரில் முக்கிய சாலைகள் வாகனம் மற்றும் ஆட்கள் நடமாட்டமின்றி வெறிச்சோடி காணப்பட்டது.

மண்டியா டவுன் விசுவேஸ்வரய்யா சிலை அருகில் இருந்து நேற்று காலை 8 மணிக்கு விவசாய அமைப்பினர் பேரணி சென்றனர். மண்டியா நகர் சஞ்சய் சர்க்கிளில் கன்னட ரக்ஷண வேதிகே அமைப்பினர் மோட்டார் சைக்கிள் பேரணி சென்றனர். தமிழக அரசுக்கு எதிராகவும், காவிரி மேலாண்மை ஆணையத்துக்கு எதிராகவும் கோஷம் எழுப்பினர். இந்த முழுஅடைப்பு போராட்டத்துக்கு பா.ஜனதாவும், ஜனதாதளம்(எஸ்) கட்சியும் ஆதரவு தெரிவித்து கலந்துகொண்டன.

பெங்களூரு-மைசூரு தேசிய நெடுஞ்சாலையில் விவசாயிகள், கன்னட அமைப்பினர் மறியல் போராட்டம் நடத்தினர். அப்போது தமிழக அரசின் உருவ பொம்மை மற்றும் டயர்களுக்கு தீவைத்து கொளுத்தினர். சில இடங்களில் விவசாயிகள் மற்றும் கன்னட அமைப்பினரை போலீசார் கைது செய்து வேனில் ஏற்றி சென்றனர்.

இதேபோல் மத்தூர் நகரிலும் கன்னட அமைப்பினர் மோட்டார் சைக்கிள் பேரணி நடத்தினர். முக்கிய சாலைகளில் விவசாயிகள் பேரணி நடத்தினர். இந்த போராட்டத்தில் கல்லூரி மாணவர்களும் வகுப்புகளை புறக்கணித்து கலந்துகொண்டு கோஷம் எழுப்பினர். மேலும் மத்தூர் டவுனில் தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினின் உருவபொம்மையை எரித்து கன்னட அமைப்பினர் தங்கள் எதிர்ப்பை வெளிப்படுத்தினர்.

மண்டியா ஜே.சி.சர்க்கிள், மைசூரு-பெங்களூரு சாலையில் உருளு சேவை நடத்தி தங்கள் எதிர்ப்பை வெளிப்படுத்தினர். மண்டியா விசுவேஸ்வரய்யா சிலை முன்பு நடந்த போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்து பா.ஜனதா சார்பில் முன்னாள் மந்திரி சி.டி.ரவி, ஜனதாதளம்(எஸ்) சார்பில் மூத்த தலைவர் ஸ்ரீகண்டேகவுடா ஆகியோர் கலந்துகொண்டனர்.

இந்த முழுஅடைப்பு போராட்டத்தால் மண்டியா, மத்தூர் நகரமே ஸ்தம்பித்து போனது. காலை 8 மணி முதல் மாலை 6 மணி வரை எந்தவித அசம்பாவித சம்பவங்களும் இன்றி முழுஅடைப்பு போராட்டம் அமைதியாக நடந்தது. மாலை 6 மணிக்கு பிறகு இயல்பு வாழ்க்கை திரும்பியது. கடைகள் திறக்கப்பட்டன. ஆட்டோ, தனியார் பஸ்கள் ஓடின.

இந்த முழுஅடைப்பு போராட்டத்தையொட்டி மண்டியா மற்றும் மத்தூர் நகரில் போலீஸ் சூப்பிரண்டு, கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு, 3 துணை போலீஸ் சூப்பிரண்டுகள், இன்ஸ்பெக்டர்கள், சப்-இன்ஸ்பெக்டர்கள், ஆயுதப்படை போலீஸ்காரர்கள் என மொத்தம் 400 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.

இதேபோல், தலைநகர் பெங்களூருவிலும் தமிழகத்திற்கு காவிரி நீர் திறப்பை கண்டித்து கன்னட அமைப்பினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். தமிழக எல்லையில் உள்ள அத்திப்பள்ளியில் கன்னட ரக்ஷண வேதிகே அமைப்பினா் பிரவீன்ஷெட்டி தலைமையில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது அவர்கள் தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் படத்தை கிழித்தும், எரித்து தங்கள் ஆக்ரோஷத்தை வெளிப்படுத்தினர். அப்போது அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசார், அவர்களை கலைந்து செல்ல கூறினர். அதற்கு மறுப்பு தெரிவித்து கன்னட அமைப்பினர் சாலையில் அமர்ந்து போராட்டம் நடத்தினர்.

இதையடுத்து போலீசார், கன்னட அமைப்பினரை குண்டுக்கட்டாக தூக்கி கைது செய்து வேனில் ஏற்றி அங்கிருந்து அழைத்து சென்றனர். இந்த போராட்டத்தால் அந்த சாலையில் கடும் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. சுமார் 2 கிலோ மீட்டர் தூரத்துக்கு வாகனங்கள் அணிவகுத்து நின்றன.

மேலும் மல்லேசுவரத்தில் எருமை மாடுகளை அழைத்து வந்து கன்னட அமைப்பினர் போராட்டம் நடத்தினர். சாலையில் அரைநிர்வாணமாக படுத்து நெஞ்சில் கற்களை வைத்தும், இளநீர் கூடுகளை வைத்தும் தங்கள் எதிர்ப்பை வெளிப்படுத்தினர். மேலும் அரசு பஸ்சை தடுத்து நிறுத்தியும் போராட்டம் நடத்தினர். இதேபோல், மைசூரு வங்கி சர்க்கிள், மைசூரு ரோடு உள்ளிட்ட பெங்களூருவில் பல்வேறு பகுதிகளில் கன்னட அமைப்பினர் போராட்டம் நடத்தினர்.

மேலும் செய்திகள்