< Back
தேசிய செய்திகள்
சாம்பாரில் எலி கிடந்ததாக புகார்; ஆமதாபாத்தில் உணவகத்திற்கு சீல்
தேசிய செய்திகள்

சாம்பாரில் 'எலி' கிடந்ததாக புகார்; ஆமதாபாத்தில் உணவகத்திற்கு சீல்

தினத்தந்தி
|
21 Jun 2024 1:50 PM IST

சாம்பாரில் 'எலி' கிடந்ததாக எழுந்த புகாரை தொடர்ந்து ஆமதாபாத்தில் உள்ள உணவகத்திற்கு அதிகாரிகள் சீல் வைத்தனர்.

காந்திநகர்,

குஜராத் மாநிலம் ஆமதாபாத்தில் உள்ள நிகோல் பகுதியில் அமைந்திருக்கும் பிரபல உணவகத்திற்கு அவினாஷ் என்பவர் நேற்று தன் மனைவியுடன் சென்றுள்ளார். அங்கு அவர்கள் இருவரும் தோசை ஆர்டர் செய்துள்ளனர். இதையடுத்து அந்த தம்பதிக்கு தோசையுடன் சேர்த்து சாம்பார், சட்னி ஆகியவை பரிமாறப்பட்டுள்ளன.

அப்போது அவர்களது மேஜையில் வைக்கப்பட்டிருந்த சாம்பாரில் ஏதோ ஒன்று மிதப்பதை அவினாஷ் கவனித்துள்ளார். அதை உற்றுப்பார்த்தபோது, சாம்பாரில் எலி கிடந்ததைப் பார்த்து அவினாஷ் அதிர்ச்சியடைந்தார். உடனடியாக இது குறித்து உணவக ஊழியர்களிடம் கூறிய அவர், நகராட்சி நிர்வாகத்திற்கும் தகவல் தெரிவித்துள்ளார்.

இதையடுத்து ஆமதாபாத் நகராட்சி நிர்வாக அதிகாரிகள் சம்பந்தப்பட்ட உணவகத்திற்கு வந்து சோதனை மேற்கொண்டனர். பின்னர் அந்த உணவகத்திற்கு அதிகாரிகள் அதிரடியாக சீல் வைத்தனர். ஆமதாபாத் நகராட்சியில் உள்ள அனைத்து உணவகங்களிலும் சமையலறைகளை சுத்தமாகவும், உணவு பொருட்களை பாதுகாப்பாகவும் வைக்க வேண்டும் எனவும், இதுபோன்ற நிகழ்வுகள் ஏற்பட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.


மேலும் செய்திகள்