மைசூருவில் இந்திய கம்யூனிஸ்டு கட்சியினர் ஆர்ப்பாட்டம்
|மணிப்பூர் கலவரத்தை கண்டித்து மைசூருவில் இந்திய கம்யூனிஸ்டு கட்சியினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
மைசூரு-
மணிப்பூரில் கடந்த 2 மாதங்களாக கலவரம் நீடித்து வருகிறது. இந்த கலவரத்தில் இளம்பெண்களை நிர்வாணமாக்கி அழைத்து செல்லும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானது. இந்த சம்பவத்தை கண்டித்து நாடு முழுவதும் போராட்டம் நடந்து வருகிறது. இந்தநிலையில், நேற்று காலை மைசூருவில் இந்திய கம்யூனிஸ்டு கட்சியினர் காந்தி சிலை முன்பு ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
அப்போது ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டவர்கள் கூறுகையில், மணிப்பூர் மாநிலமே எரிந்து கொண்டு இருக்கிறது. ஆனால் இதுவரை மத்திய மற்றும் மணிப்பூர் மாநில அரசு எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை. மேலும் கலவரத்தை கட்டுப்படுத்த முடியாமல் மத்திய அரசு திணறி வருகிறது. மணிப்பூரில் பா.ஜனதாவிற்கு ஆதரவு தரும் பிரிவினரை தவிர மற்ற பிரிவினர் மீது தாக்குதல் நடந்து வருகிறது.
எனவே அங்குள்ள மக்களை பாதுகாத்து கலவரத்தை கட்டுக்குள் கொண்டு வர மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் மத்திய மற்றும் மணிப்பூர் மாநில அரசை கண்டித்து கோஷங்களை எழுப்பினர். இதேப் போல், மணிப்பூர் கலவரத்தை கண்டித்து தலித் சங்கத்தினர், விவசாய சங்கத்தினர், சமூக ஆர்வலர்கள் பல்வேறு இடங்களில் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.