< Back
தேசிய செய்திகள்
திருவிழாவில் இருதரப்பினர் இடையே கோஷ்டி ேமாதல்; 8 பேர் படுகாயம்
தேசிய செய்திகள்

திருவிழாவில் இருதரப்பினர் இடையே கோஷ்டி ேமாதல்; 8 பேர் படுகாயம்

தினத்தந்தி
|
8 Oct 2022 3:41 AM IST

கோலார் தாலுகா தானவஹள்ளி கிராமத்தில் நடந்த கோவில் திருவிழாவின்போது இருதரப்பினர் இடையே கோஷ்டி மோதல் ஏற்பட்டது. இதில் 8 பேர் படுகாயம் அடைந்தனர்.

கோலார் தங்கவயல்:

கோலார் தாலுகா தானவஹள்ளி கிராமத்தில் நடந்த கோவில் திருவிழாவின்போது இருதரப்பினர் இடையே கோஷ்டி மோதல் ஏற்பட்டது. இதில் 8 பேர் படுகாயம் அடைந்தனர்.

கோஷ்டி மோதல்

கோலார் தாலுகா தானவஹள்ளி கிராமத்தில் மாரியம்மன் கோவில் உள்ளது. நேற்று முன்தினம் இரவு மாரியம்மன் கோவிலில் திருவிழா நடந்தது. திருவிழாவை முன்னிட்டு தேரோட்டம் நடந்துள்ளது. அப்போது தேர் எந்த தெருவில் செல்ல வேண்டும் என்பது குறித்த விவாதம் எழுந்தது. இந்த விவாதத்தில் இருதரப்பினர் இடையே கோஷ்டி மோதல் ஏற்பட்டுள்ளது. அப்போது பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் இருதரப்பினரையும் சமாதானம் செய்தனர். ஆனால் முடியவில்லை.

இதையடுத்து கைகலப்பு முற்றிய நிலையில் கோஷ்டி மோதலில் ஈடுபட்டவர்கள் ஒருவரை ஒருவர் கற்களாலும், உருட்டுக்கட்டைகளாலும் தாக்கிக்கொண்டனர். அதில் இருதரப்பையும் சேர்ந்த 8 பேர் படுகாயம் அடைந்தனர். இதில் காயம் அடைந்தவர்களை மீட்டு சிகிச்சைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

பலத்த போலீஸ் பாதுகாப்பு

இச்சம்பவம் குறித்து தகவல் அறிந்த கோலார் புறநகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில் அந்த கிராமம் அருகே கல்குவாரி நடப்பதாகவும், அதில் அதே கிராமத்தை சேர்ந்த ஒரு பிரிவினர் கல்குவாரி நடத்தக்கூடாது என்றும், மற்றொரு பிரிவினர் கல்குவாரி நடத்தலாம் என்றும் கூறி உள்ளனர்.

இதனால், அந்த இரு கோஷ்டியினருக்கு அடிக்கடி மோதல் ஏற்பட்டு வந்தது தெரியவந்தது. அந்த முன்விரோதம் காரணமாகவே தற்போதும் மோதல் ஏற்பட்டது விசாரணையில் தெரியவந்தது. இதையடுத்து அசம்பாவிதம் நடக்காமல் இருக்க கிராமத்தில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

போலீஸ் சூப்பிரண்டு சமாதானம்

இதையடுத்து நேற்று காலை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு தேவராஜ் மற்றும் போலீஸ் உயர் அதிகாரிகள் விரைந்து வந்து கிராம மக்களை வரவழைத்து சமாதான பேச்சுவார்த்தை நடத்தினர்.

அப்போது முன் விரோதத்தை மனதில் வைத்துக்கொண்டு சாதியின் பெயரை முன்வைத்து கலவரத்தை தூண்டினால் சம்மந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரிக்கை விடுத்தனர்.

மேலும் செய்திகள்