வீர சாவர்க்கர் குறித்து கருத்து: ராகுல்காந்தி மீது வழக்குப்பதிவு
|வீர சாவர்க்கர் குறித்து கருத்து கூறிய சம்பவத்தில் ராகுல் காந்தி மீது மராட்டிய போலீசார் வழக்குப்பதிவு செய்து உள்ளனர்.
மும்பை,
காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை நடைபயணம் மேற்கொண்டு வருகிறார். மராட்டியத்தில் அவரது நடைபயணம் நடைபெற்று வரும் நிலையில், அவர் சுதந்திர போராட்ட வீரர் வீர சாவர்க்கரை கடுமையாக தாக்கி பேசியுள்ளார்.
வீரசாவர்க்கர் குறித்த ராகுல்காந்தியின் பேச்சுக்கு மராட்டியத்தில் பா.ஜனதா, முதல்-மந்திரி ஷிண்டேயின் சிவசேனா, நவநிர்மாண் சேனா கட்சிகள் கண்டனம் தெரிவித்து உள்ளன. மேலும் அவர்கள் ராகுல்காந்திக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். மராட்டியத்தில் காங்கிரசுடன் கூட்டணியில் உள்ள முன்னாள் முதல்-மந்திரி உத்தவ் தாக்கரேவும் ராகுல் காந்தியின் பேச்சுக்கு அதிருப்தி தெரிவித்து இருந்தார்.
இந்தநிலையில் வீரசாவர்க்கர் குறித்து அவதூறாக பேசியதாக ராகுல்காந்தி மீது தானே நகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து உள்ளனர். இதுதொடர்பாக போலீஸ் அதிகாரி ஒருவர் கூறுகையில், "தானேயை சேர்ந்த முதல்-மந்திரி ஏக்நாத் ஷிண்டேயின் சிவசேனா நிர்வாகி வந்தனா டோங்ரே அளித்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்து உள்ளோம். வீரசாவர்க்கர் குறித்து அவதூறாக பேசி ராகுல்காந்தி மக்களின் உணர்வுகளை புண்படுத்தியதாக அவர் புகாரில் கூறியிருந்தார். அந்த புகாரின் பேரில் ராகுல் காந்தி மீது குற்றப்பிரிவு 500 (அவதூறு), 501-ன் கீழ் வழக்குப்பதிவு செய்து உள்ளோம்" என்றார்.