< Back
தேசிய செய்திகள்
நீதிபதிகளை நியமிக்க சிறந்த முறை கொலீஜியம்தான் - சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதி
தேசிய செய்திகள்

நீதிபதிகளை நியமிக்க சிறந்த முறை கொலீஜியம்தான் - சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதி

தினத்தந்தி
|
19 March 2023 1:11 AM IST

ஐகோர்ட்டு, சுப்ரீம் கோர்ட்டு நீதிபதிகளை நியமிப்பதற்கான சிறந்த முறை கொலீஜியம் முறைதான் என்று சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் உறுதிபட கூறினார்.

கொலீஜியம் முறை

நமது நாட்டில் ஐகோர்ட்டு, சுப்ரீம் கோர்ட்டு நீதிபதிகள் நியமனத்தில் தற்போது 'கொலீஜியம்' முறை பின்பற்றப்படுகிறது. சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதி தலைமையில் மூத்த நீதிபதிகளைக்கொண்ட இந்த 'கொலீஜியம்' செய்கிற பரிந்துரையை மத்திய அரசு பரிசீலித்து, ஜனாதிபதிக்கு அனுப்பி, அவர் நியமன உத்தரவை பிறப்பிக்கிறார். இதில் இன்னாரைத்தான் நீதிபதியாக நியமிக்க வேண்டும் என்பதில் மத்திய அரசுக்கு நேரடி பங்கு இல்லை. ஆனால் இதில் நேரடி பங்களிப்பைப் பெற தற்போது மத்திய அரசு விரும்புகிறது.

இதனால் சுப்ரீம் கோர்ட்டு கொலீஜியத்துக்கும், மத்திய அரசுக்கும் இடையே மோதல் போக்கு நிலவி வருகிறது. கொலீஜியம் முறை வெளிப்படைத்தன்மை இல்லாதது என்று மத்திய சட்டமந்திரி கிரண் ரிஜிஜூ கடுமையாக விமர்சித்து வருகிறார்.

மிகச்சிறந்த முறை 'கொலீஜியம்'

இந்த நிலையில், டெல்லியில் நேற்று நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் சுப்ரீம் கோர்ட்டின் தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் கலந்து கொண்டு பேசுகையில் 'கொலீஜியம்' முறை பற்றி குறிப்பிட்டார்.

அவர் கூறியதாவது:-

ஒவ்வொரு முறையுமே மிகச்சரியானதாக இருந்து விடுவதில்லை. ஆனால் நாங்கள் நீதிபதிகள் நியமனத்தில் உருவாக்கி உள்ள 'கொலீஜியம்' முறை மிகச்சிறந்த முறைதான். இதன் நோக்கம், நீதித்துறையின் சுதந்திரத்தைப் பாதுகாப்பதுதான். இது முக்கியமான மதிப்பு ஆகும். நீதித்துறை சுதந்திரமான அமைப்பாக திகழ வேண்டும் என்றால், அது வெளிப்புற நபர்கள் தாக்கங்களில் இருந்து பாதுகாக்கப்பட வேண்டும்.

'கருத்து வேறுபாட்டில் தவறில்லை'

(குறிப்பிட்ட நீதிபதிகள் நியமனத்தில் 'கொலீஜியம்' செய்த பரிந்துரையை மத்திய அரசு நிராகரித்து, அதற்குரிய காரணத்தை 'கொலீஜியம்' பகிரங்கமாக வெளியிட்டதில் மத்திய சட்ட மந்திரி கிரண் ரிஜிஜூ அதிருப்தி தெரிவித்திருந்தார். இதுபற்றியும் தலைமை நீதிபதி குறிப்பிட்டார்.)

கருத்தில் வேறுபாடு இருப்பதில் என்ன தவறு? ஆனால், அத்தகைய வேறுபாட்டை நான் வலுவான அரசியலமைப்பு நிபுணத்துவ உணர்வுடன் கையாள வேண்டும்.

நான் சட்ட மந்திரியுடன் பிரச்சினைகளில் இணைய விரும்பவில்லை. ஆனால் நாங்கள் கருத்து வேறுபாடுகள் கொண்டுள்ளோம். வழக்குகளைப் பொறுத்தமட்டில் மத்திய அரசிடம் இருந்து எந்த அழுத்தமும் இல்லை. நீதித்துறை மீது அழுத்தம் இல்லை என்பதற்கு சரியான ஆதாரம், தேர்தல் கமிஷன் சீர்திருத்தம் தொடர்பான தீர்ப்பு ஆகும்.

இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் செய்திகள்