கல்லூரி பேராசிரியரை வாளுடன் சென்று மிரட்டிய மாணவர்
|வகுப்புக்கு வராததை பெற்றோரிடம் கூறியதால் கல்லூரி பேராசிரியரை வாளுடன் சென்று மாணவர்மிரட்டிய சம்பவம் மண்டியாவில் நடந்துள்ளது.
மண்டியா:
மண்டியா மாவட்டம் நாகமங்களா டவுனில் தனியார் கல்லூரி செயல்பட்டு வருகிறது. இந்த கல்லூரியில் துமகூரு மாவட்டம் குனிகல் தாலுகா அவரேகெரே கிராமத்தை சேர்ந்த உதய் கவுடா (வயது 18) என்பவர் டிப்ளமோ படித்து வந்தார். அவர் சரிவர கல்லூரிக்கு வராமல் இருந்து வந்துள்ளார். இதுகுறித்து அக்கல்லூரியில் பணியாற்றி வரும் பேராசிரியர் சாந்தன், உதய் கவுடாவின் பெற்றோரிடம் புகார் தெரிவித்துள்ளார்.
இதனால் உதய் கவுடாவை பெற்றோர் கண்டித்துள்ளனர். இந்த நிலையில் நேற்று முன்தினம் கல்லூரிக்கு சென்ற உதய்கவுடா, பேராசிரியர் சாந்தன் தனியாக வகுப்பறையில் இருந்த போது சென்று, நான் கல்லூரிக்கு வராதது பற்றி ஏன் எனது பெற்றோரிடம் கூறினீர்கள் என கேள்வி கேட்டு தகராறு செய்துள்ளார். மேலும் தான் மறைத்துவைத்திருந்த வாளை கையில் வைத்துக்கொண்டு, இனிமேல் எனது விவகாரத்தில் தலையிட்டால் நடப்பது வேறு என மிரட்டி தகாத வார்த்தையில் திட்டியுள்ளார்.
இதுகுறித்து பேராசிரியர் சாந்தன், பெல்லூர் போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். பேராசிரியரை உதய்கவுடா வாளுடன் மிரட்டிய காட்சிகளை மற்றொரு மாணவர் செல்போனில் வீடியோவாக எடுத்துள்ளார். அந்த வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாகி பரபரப்பை ஏற்படுத்தியது. இதையடுத்து மாணவர், தனது பெற்றோருடன் வந்து பேராசிரியரிடம் மன்னிப்பு கேட்டுள்ளார்.