ஆயுதங்களால் தாக்கி கல்லூரி மாணவர் கொலை
|பெங்களூருவில் பட்டப்பகலில் ஆயுதங்களால் தாக்கி கல்லூரி மாணவரை கொலை செய்த பயங்கரம் நடந்துள்ளது. தலைமறைவாகி விட்ட மர்மநபர்களை போலீசார் வலைவீசி தேடிவருகிறார்கள்.
பெங்களூரு:-
மாணவர் கொலை
பெங்களூரு பசவேசுவராநகரில் வசித்து வந்தவர் சோகைல் (வயது 17). இவர், மஞ்சுநாத் நகரில் உள்ள தனியார் கல்லூரியில் பி.யூ.சி முதலாம் ஆண்டு படித்து வந்தார். நேற்று மதியம் 2.30 மணியளவில் கல்லூரி அருகே சோகையில் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது மோட்டார் சைக்கிளில் வந்த 2 பேர் சோகைலை வழிமறித்தனர்.
பின்னர் அந்த மர்மநபர்கள் தங்களிடம் இருந்த ஆயுங்களால் சோகைலை சரமாரியாக தாக்கினார்கள். இதில், அவர் பலத்த வெட்டுக்காயம் அடைந்து ரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடினார். உடனே அங்கிருந்து மர்மநபர்கள் மோட்டார் சைக்கிளில் சென்று விட்டனர். உயிருக்கு போராடிய சோகைல் தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி சோகைல் பரிதாபமாக இறந்து விட்டார்.
மர்மநபர்களுக்கு வலைவீச்சு
இதுபற்றி தகவல் அறிந்ததும் பசவேசுவராநகர் போலீசார் மற்றும் மேற்கு மண்டல துணை போலீஸ் கமிஷனர் லட்சுமண் நிம்பரகி சம்பவ இடத்தை பார்வையிட்டு விசாரணை நடத்தினார்கள். கல்லூரி மாணவரை கொலை செய்தவர்கள் யார்?, என்ன காரணத்திற்காக கொலை நடந்தது என்பது பற்றி தெரியவில்லை. இதுதொடர்பாக அவரது நண்பர்கள், குடும்பத்தினரிடம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.
அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராக்களை கைப்பற்றியும் போலீசார் ஆய்வு நடத்தி வருகின்றனர். இதுகுறித்து பசவேசுவராநகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள். மர்மநபர்களையும் போலீசார் வலைவீசி தேடிவருகிறார்கள்.