எல்லை தாண்டிய குற்றங்களை கையாள்வதில் மத்திய, மாநில அரசுகளுக்கு கூட்டு பொறுப்பு இருக்கிறது - அமித்ஷா
|சூரஜ்குண்ட் நகரில், மாநில உள்துறை மந்திரிகளின் சிந்தனை அமர்வு மாநாட்டை மாநில உள்துறை மந்திரி அமித்ஷா தொடங்கி வைத்தார்.
சூரஜ்குண்ட்,
அரியானா மாநிலம், சூரஜ்குண்ட் நகரில், மாநில உள்துறை மந்திரிகளின் சிந்தனை அமர்வு மாநாட்டை மத்திய அரசு கூட்டி உள்ளது. 2 நாள் நடைபெறுகிற இந்த மாநாட்டின் நோக்கம், பிரதமர் மோடி தனது சுதந்திர தின உரையின்போது அறிவித்த 'விஷன் 2047' என்னும் இந்திய சுதந்திர நூற்றாண்டுக்கான தொலைநோக்குப்பார்வையையும், 'பஞ்ச் பிரான்' என்னும் 5 உறுதிமொழிகளையும் செயல்படுத்துவதற்கான செயல் திட்டத்தையும் உருவாக்குவது ஆகும்.
இந்த மாநாட்டில் 'சைபர் கிரைம்' (இணையவழி குற்றம்) தடுப்பு மேலாண்மைக்கான சுற்றுச்சூழல் அமைப்பை உருவாக்குதல், போலீஸ் படைகளை நவீனமயமாக்குதல், குற்றவியல் நீதி அமைப்பில் தகவல் தொழில்நுட்பத்தின் பயன்பாட்டை அதிகரித்தல், நில எல்லை மேலாண்மை மற்றும் கடலோர பாதுகாப்பு உள்ளிட்ட உள்நாட்டு பாதுகாப்பு பிரச்சினைகள் குறித்தும் விவாதிக்கப்படுகிறது.
இந்த மாநாட்டை மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா நேற்று தொடங்கி வைத்தார். அப்போது அவர் பேசும்போது கூறியதாவது:-
நமது அரசியலமைப்பின்படி, சட்டம்-ஒழுங்கு என்பது மாநிலத்தின் கையில் உள்ளது. ஆனால், எல்லை தாண்டிய அல்லது எல்லையில்லாத குற்றங்களுக்கு எதிராக அனைத்து மாநிலங்களும் ஒன்றாக உட்கார்ந்து, அவற்றைப் பற்றி சிந்தித்து, பொதுவான உத்தியை உருவாக்கி, அவற்றைக் கட்டுப்படுத்தும் முயற்சிகளை மேற்கொள்ளும்போது மட்டுமே நாம் வெற்றிபெற முடியும்.
சமூகத்தை பயத்தில் இருந்து விடுவிப்பதற்காக, நாட்டின் எல்லைக்கு அப்பாலோ, மாநிலங்களின் எல்லைக்கு அப்பாலோ இருந்து வருகிற குற்றங்களை திறமையுடன் கையாள்வது மத்திய, மாநில அரசுகளின் கூட்டு பொறுப்பாகும்.
மாநிலம்தோறும் என்.ஐ.ஏ. அலுவலகம்
உள்துறை பாதுகாப்பின் எல்லா முனைகளிலும், அது காஷ்மீராகவோ, வடகிழக்காகவோ அல்லது போதைப்பொருள் கடத்தலாகவோ இருந்தாலும் மோடி அரசு வெற்றியை பதிவு செய்துள்ளது. எல்லா மாநிலங்களிலும் தேசிய புலனாய்வு முகமை அலுவலகங்கள் (என்.ஐ.ஏ.) இருக்க வேண்டும். இது பயங்கரவாத தடுப்பு உத்தி ஆகும்.
நமது உள்நாட்டு பாதுகாப்பு வலுவாக உள்ளது. 35 ஆயிரம் போலீசார் மற்றும் மத்திய ஆயுதப்படை போலீசார், நமது நாட்டின் ஒற்றுமைக்காகவும், ஒருமைப்பாட்டுக்காகவும் தங்கள் இன்னுயிரை நீத்துள்ளனர்.
இவ்வாறு அவர் கூறினார்.
இந்த மாநாட்டில் பிரதமர் மோடி இன்று காணொலிக்காட்சி வழியாக கலந்து கொண்டு பேசுகிறார்.
4 மாநிலங்கள் புறக்கணிப்பு
இந்த மாநாட்டில் பா.ஜ.க. ஆளாத மாநிலங்களில் உள்துறை பொறுப்பை கவனிக்கிற 4 முதல்-மந்திரிகள் கலந்துகொள்ளவில்லை. அவர்கள் தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் மற்றும் முதல்-மந்திரிகளான மம்தா பானர்ஜி (மேற்கு வங்காளம்), நிதிஷ் குமார் (பீகார்), நவீன் பட்நாயக் (ஒடிசா) ஆகியோர் ஆவார்கள்.
அதே நேரத்தில் பா.ஜ.க. ஆளாத பஞ்சாப் முதல்-மந்திரி பகவந்த் மானும், கேரள முதல்-மந்திரி பினராயி விஜயனும் கலந்துகொண்டுள்ளனர்.
இந்த மாநாட்டில் முதல்-மந்திரிகள் மனோகர்லால் கட்டார் (அரியானா), யோகி ஆதித்யநாத் (உ.பி.), ஹிமந்த பிஸ்வா சர்மா (அசாம்), பீரன் சிங் (மணிப்பூர்), பிரமோத் சவந்த் (கோவா), மாணிக் சகா (திரிபுரா), புஷ்கர் சிங் தாமி (உத்தரகாண்ட்), பிரேம் சிங் தாமங்க் (சிக்கிம்) பங்கேற்றுள்ளனர்.
பஞ்சாப் கவர்னர் பன்வாரிலால் புரோகித், மராட்டிய துணை முதல்-மந்திரி தேவேந்திர பட்னாவிஸ், நாகலாந்து துணை முதல்-மந்திரி ஒய்.பட்டன் ஆகியோரும் கலந்து கொண்டுள்ளனர்.