< Back
தேசிய செய்திகள்
ஜிஎஸ்டி பற்றி கோரிக்கை வைத்த கோவை தொழிலதிபர் அவமதிக்கப்பட்டிருக்கிறார்: ராகுல் காந்தி கண்டனம்
தேசிய செய்திகள்

ஜிஎஸ்டி பற்றி கோரிக்கை வைத்த கோவை தொழிலதிபர் அவமதிக்கப்பட்டிருக்கிறார்: ராகுல் காந்தி கண்டனம்

தினத்தந்தி
|
13 Sept 2024 1:29 PM IST

அதிகாரத்தில் இருப்போரின் ஈகோ புண்படுத்தப்பட்டால், அவர்கள் என்ன செய்வார்கள் என்பது கண்கூடாக தெரிகிறது என்று ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.

புதுடெல்லி,

கோவையில் நடைபெற்ற தொழில் முனைவோர் கலந்தாய்வு கூட்டத்தில் ஜி.எஸ்.டி. குறித்து ஓட்டல் உரிமையாளர்கள் சங்க நிர்வாகியும், அன்னபூர்ணா ஓட்டல் நிறுவனருமான சீனிவாசன் மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமனிடம் அடுக்கடுக்கான கேள்விகளை எழுப்பினார்.

அவர் பேசும்போது, இனிப்புக்கு 5 சதவீதம் ஜி.எஸ்.டி. இருக்கும் நிலையில், காரத்துக்கு 12 சதவீதம் ஜி.எஸ்.டி. உள்ளது. வெறும் பண்ணுக்கு ஜி.எஸ்.டி. இல்லை. ஆனால் ஜாமுடன் பண் வாங்கினால் ஜி.எஸ்.டி. உள்ளது. இதுபோன்ற முரண்பாடுகளை களைய வேண்டும் என்று கூறினார். இது தொடர்பான வீடியோ சமூகவலைத்தளங்களில் வைரலாகியது.

இதையடுத்து நிர்மலா சீதாராமனை அன்னபூர்னா நிறுவனர் சீனிவாசன் நேரில் சந்தித்து வருத்தம் தெரிவித்தார். பின்னர் அவர் தான் எந்த கட்சியையும் சாராதவன் என்றும், ஓட்டல் தொழிலுக்காக அவ்வாறு கூறியதாகவும் வருத்தம் தெரிவித்தார். இது தொடர்பான வீடியோவும் தற்போது வைரலாகி வருகிறது. இந்த வீடியோவுக்கு திமுக எம்.பி.கனிமொழி, காங்கிரஸ் எம்.பி.ஜோதிமணி ஆகியோர் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில், மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தியும் கண்டனம் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் தனது எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில்,

"கோயம்புத்தூரில் உள்ள அன்னபூர்ணா உணவகம் போன்ற ஒரு சிறு வணிகத்தின் உரிமையாளர், நமது அரசு ஊழியர்களிடம் எளிமைப்படுத்தப்பட்ட ஜிஎஸ்டி முறையைக் கேட்கும்போது, அவரது கோரிக்கை ஆணவத்துடனும் முற்றிலும் அவமரியாதையுடன் சந்திக்கப்படுகிறது.

ஒரு கோடீஸ்வர நண்பர் விதிகளை வளைக்க, சட்டங்களை மாற்ற அல்லது தேசிய சொத்துக்களைப் பெற முற்படும்போது, மோடி சிவப்புக் கம்பளம் விரிக்கிறார்.

பணமதிப்பு நீக்கம், அணுக முடியாத வங்கி முறை, வரி பறிப்பு மற்றும் பேரழிவு தரும் ஜிஎஸ்டி போன்றவற்றின் தாக்கங்களை நமது சிறு வணிக உரிமையாளர்கள் ஏற்கனவே சகித்துக்கொண்டிருக்கிறார்கள். கடைசியாக அவர்கள் தகுதியானது மேலும் அவமானம் தான்.

ஆனால் அதிகாரத்தில் இருப்பவர்களின் பலவீனமான ஈகோக்கள் புண்படுத்தப்படும்போது, அவர்கள் என்ன செய்வார்கள் என்பது கண்கூடாக தெரிகிறது.

அவர்கள் பல ஆண்டுகளாக நிவாரணம் கேட்டு வருகின்றனர். இந்த திமிர்பிடித்த அரசாங்கம் மக்கள் சொல்வதைக் கேட்டால், ஒரே வரி விகிதத்துடன் கூடிய எளிமைப்படுத்தப்பட்ட ஜிஎஸ்டியால் லட்சக்கணக்கான வணிகர்களின் பிரச்சினைகள் தீர்க்கப்படும் என்பதை அவர்கள் புரிந்துகொள்வார்கள்" என்று தெரிவித்துள்ளர்.

மேலும் செய்திகள்