'வந்தே பாரத்' ரெயிலில் வழங்கிய காலை உணவில் கரப்பான் பூச்சிகள் - பயணிகள் அதிர்ச்சி
|உரிய விசாரணை மேற்கொண்டு நடவடிக்கை எடுக்கப்படும் என்று ரெயில்வே நிர்வாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
பெரும்பாவூர்,
கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் இருந்து காசர்கோடு நோக்கி நேற்று காலை வந்தே பாரத் ரெயில் வந்து கொண்டிருந்தது. காலை 8 மணி அளவில் செங்கன்னூர் வந்த போது ரெயிலில் பயணம் செய்த பயணிகளுக்கு காலை சிற்றுண்டி வழங்கப்பட்டது. அதில், காலை உணவாக வழங்கப்பட்ட இடியாப்பம் பாக்கெட்டை திறந்து பார்த்த பயணிகளுக்கு அதிர்ச்சி காத்திருந்தது. அந்த உணவில் இருந்து கரப்பான் பூச்சிகள் நாலாபுறமும் சிதறி ஓடியதாக தெரிகிறது. இதையடுத்து பயணிகள் ரெயில்வே ஊழியர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
பின்னர் அவர்கள் இதுகுறித்து எர்ணாகுளத்தில் ரெயில்வே அதிகாரிகளிடம் புகார் தெரிவித்தனர். இதுபற்றி ரெயில்வே உணவு தயாரிக்கும் ஒப்பந்ததாரர் கூறுகையில், இந்த உணவுகள் தயாரிக்கப்பட்ட போது எந்த விதமான பிரச்சினைகளும் இல்லை. அவை தீவிரமாக கண்காணிக்கப்பட்டு சுத்தமாக பேக் செய்யப்பட்டது. உணவு பாக்கெட்டுகளை ரெயிலில் ஏற்றி வைத்த போது, அங்கிருந்து கரப்பான் பூச்சிகள் அந்த பாக்கெட்டுக்குள் நுழைந்திருக்கலாம் என்றனர். இதுகுறித்து உரிய விசாரணை மேற்கொண்டு நடவடிக்கை எடுக்கப்படும் என்று ரெயில்வே நிர்வாக அதிகாரிகள் தெரிவித்தனர்.