< Back
தேசிய செய்திகள்
நவிமும்பை துறைமுகத்தில் ரூ.500 கோடி போதைப்பொருள் பறிமுதல்
தேசிய செய்திகள்

நவிமும்பை துறைமுகத்தில் ரூ.500 கோடி போதைப்பொருள் பறிமுதல்

தினத்தந்தி
|
9 Oct 2022 1:55 AM IST

நவிமும்பை துறைமுகத்தில் கன்டெய்னரில் மறைத்து பழக்கூடையில் கடத்தி வந்த ரூ.500 கோடி போதைப்பொருள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

பழப்பெட்டியில் போதைப்பொருள்

மராட்டிய மாநிலம் நவிமும்பையில் உள்ள நவசேவா துறைமுகத்துக்கு வெளிநாட்டில் இருந்து அதிகளவில் போதைப்பொருள் கடத்தி வரப்பட உள்ளதாக வருவாய் புலனாய்வு இயக்குனரக பிரிவு அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து அதிகாரிகள் சம்பவத்தன்று நவசேவா துறைமுகத்தில் தென் ஆப்பிரிக்காவில் இருந்து கப்பலில் வந்த கன்டெய்னர்களில் அதிரடி சோதனை நடத்தினர்.

அதில், ஒரு கன்டெய்னரில் இறக்குமதி செய்யப்பட்ட கிரீன் ஆப்பிள் பழங்கள் என எழுதப்பட்டு இருந்தன. இதையடுத்து அதிகாரிகள் அந்த கன்டெய்னரை திறந்து, அதில் பழங்கள் வைக்கப்பட்டு இருந்த பெட்டிகளில் தீவிர சோதனை நடத்தினர். அப்போது, சில பெட்டிகளில் இருந்து உயர்ரக கொகைன் போதைப்பொருள் கட்டிகள் மறைத்து வைக்கப்பட்டிருப்பதை கண்டுபிடித்தனர்.

ரூ.502 கோடி

மொத்தம் தலா ஒரு கிலோ எடையுள்ள 50 கட்டிகளை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். 50.23 கிலோ எடையிருந்த அந்த போதைப்பொருள் கட்டிகளின் சர்வதேச மதிப்பு ரூ.502 கோடி என அதிகாரி ஒருவர் கூறினார்.

போதைப்பொருள் பறிமுதல் செய்யப்பட்ட கன்டெய்னரில் இருந்த பழங்களை இறக்குமதி செய்தவர் சமீபத்தில் தான் ஆரஞ்சு பழ கூடையில் மறைத்து வெளிநாட்டில் இருந்து போதைப்பொருள் கடத்திய வழக்கில் அதிகாரிகளால் கைது செய்யப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

மும்பையில் சமீபகாலமாக அதிக அளவில் போதைப்பொருட்கள் பறிமுதல் செய்யப்படும் சம்பவங்கள் பொதுமக்கள் இடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

மேலும் செய்திகள்