கொச்சியில், பயிற்சியின் போது ஹெலிகாப்டர் விழுந்து விபத்து; விமானி உள்பட 3 பேர் காயம்
|கொச்சியில் பயிற்சியின்போது ஹெலிகாப்டர் தரையில் விழுந்து விபத்துக்குள்ளானது. இதில் விமானி உள்பட 3 பேர் காயம் அடைந்தனர்.
பயிற்சி ஹெலிகாப்டர்
இந்திய கடலோர காவல்படைக்கு சொந்தமான சி.ஜி.-855 என்ற வகையை சேர்ந்த இலகுரக ஹெலிகாப்டர், கொச்சி சர்வதேச விமான நிலையம் அருகே உள்ள ஹெலிகாப்டர் தளத்தில் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்தது. இந்த ஹெலிகாப்டர் கடந்த 8-ந் தேதி மும்பை கடற்கரை அருகே பயிற்சியின் போது கட்டுப்பாட்டை இழந்து விபத்துக்குள்ளானது. பின்னர் அங்கிருந்து பழுது நீக்கும் பணிக்காக கொச்சிக்கு கொண்டு வரப்பட்டது. தற்போது பழுது நீக்கும் பணி முடிந்து, மீண்டும் பயிற்சிக்கு தயார் செய்யப்பட்டு இருந்தது.
40 அடி உயரத்தில் இருந்து...
இந்தநிலையில் நேற்று மதியம் 12.25 மணியளவில் ெஹலிகாப்டரில் 2 பேருக்கு பயிற்சி அளிக்கப்பட்டது. அதில் விமானி ராஜேஷ் லோட்டோ உள்பட 3 பேர் இருந்தனர். தொடர்ந்து ஹெலிகாப்டர் தரையில் இருந்து 40 அடி உயரத்தில் பறந்தது. அப்போது திடீரென திசை காட்டும் கருவிகள் செயலிழந்தது. மேலும் விமானியின் கட்டுப்பாட்டை இழந்தது. இதனால் அவர் அவசர அவசரமாக ஹெலிகாப்டரை தரையிறக்க முயன்றார். எனினும், தளத்தின் இடதுபுறமாக ஹெலிகாப்டர் விழுந்து விபத்துக்குள்ளானது.
ஓடுதளம் மூடல்
இந்த விபத்தில் விமானி உள்பட 3 பேர் காயம் அடைந்தனர். அவர்களை விமான நிலைய அதிகாரிகள் மீட்டு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதையடுத்து ஹெலிகாப்டர் தளம் 2 மணி நேரம் மூடப்பட்டது. மேலும் கொச்சி சர்வதேச விமான நிலையத்தின் ஓடுதளமும் மூடப்பட்டது. அங்கு வந்த மாலத்தீவு விமானமும், மஸ்கட்டில் இருந்து வந்த மற்றொரு விமானமும் திருவனந்தபுரம் விமான நிலையத்திற்கு திருப்பி விடப்பட்டது.
விசாரணை
இதற்கிடையில் கடலோர காவல் படை அதிகாரிகள் ஹெலிகாப்டரை கிரேன் மூலம் மீட்டு அருகில் உள்ள பணிமனைக்கு கொண்டு சென்றனர். அதன்பின்னர் கொச்சி சர்வதேச விமான நிலையத்தின் ஓடுதளம் திறக்கப்பட்டு விமான சேவைகள் தொடங்கியது. இந்த விபத்து குறித்து துறை சார்ந்த விசாரணை நடத்தப்படும் என்று கடலோர காவல் படை அதிகாரிகள் தெரிவித்தனர்.