< Back
தேசிய செய்திகள்
மராட்டியத்தில் சிறப்பு திட்டம் மூலம் 10 லட்சம் பெண்களுக்கு வேலை வாய்ப்பு பயிற்சி
தேசிய செய்திகள்

மராட்டியத்தில் சிறப்பு திட்டம் மூலம் 10 லட்சம் பெண்களுக்கு வேலை வாய்ப்பு பயிற்சி

தினத்தந்தி
|
7 Oct 2023 10:46 PM GMT

மராட்டியத்தில் சிறப்பு திட்டம் மூலம் 10 லட்சம் பெண்களுக்கு வேலை வாய்ப்பு பயிற்சி வழங்கப்படும் என மாநில அரசு அறிவித்து உள்ளது.

ஒரு ஆண்டு பயிற்சி

மராட்டிய அரசு 'முதல்-மந்திரி பெண் சக்தி பிரசாரம்' என்ற திட்டத்தை ெதாடங்கி உள்ளது. இந்த திட்டத்தின் கீழ் பெண்களுக்கு பல்வேறு பயிற்சிகள் வழங்கப்பட உள்ளது. கடந்த 2-ந் தேதி முதல் இந்த திட்டம் அமலுக்கு வந்து விட்டது. அடுத்த ஆண்டு அக்டோபர் 1-ந் தேதி வரை திட்டம் நடைமுறையில் இருக்கும். குறிப்பாக வல்லுநர்களை கொண்டு தொழில் தொடங்க, விரிவுப்படுத்த ஒரு ஆண்டு பயிற்சி வழங்கப்பட உள்ளது. வேலைவாய்ப்பு பயிற்சியும் வழங்கப்படுகிறது. இந்த திட்டம் மூலம் மாவட்டத்துக்கு குறைந்தது ஒரு லட்சம் பெண்கள் பயன்பெறுவார்கள். ஒரு ஆண்டில் அரசு துறைகள், தன்னார்வ அமைப்புகள், பயிற்சி மையங்கள் மூலம் குறைந்தது 10 லட்சம் பெண்களுக்கு பயிற்சி அளிக்கப்பட உள்ளது. அரசின் பல்வேறு திட்டங்கள், அதை பயன்படுத்துவதற்கான தகுதிகள் குறித்தும் சுய உதவிக்குழுவினருக்கு தெரிவிக்கப்பட உள்ளது.

முதல்-மந்திரி தலைமையில் குழு

இந்த திட்டத்துக்காக முதல்-மந்திரி தலைமையில் குழு அமைக்கப்படும். குழுவில் பயிற்சி மையங்கள், தொழில்துறை செயலாளர், வங்கி அதிகாரிகள், சுய உதவிக்குழு பிரதிநிதிகள், வல்லுநர்கள், ஆன்லைன் சந்தை பிரதிநிதிகள், வணிக சங்க உறுப்பினர்கள் இடம்பெறுவார்கள். இந்த குழுவின் கூட்டம் மாதந்தோறும் முதல் திங்கட்கிழமை நடைபெறும்.

மேலும் திட்டத்தின் செயல்பாடுகளை மாதந்தோறும் பெண்கள் மற்றும் குழந்தை மேம்பாட்டு துறை மந்திரி ஆய்வு செய்து முதல்-மந்திரி, துணை முதல்-மந்திரிகளுக்கு அறிக்கை தாக்கல் செய்வார். திட்டத்துக்கு முதல்-மந்திரி அலுவலக ஐ.ஏ.எஸ். அதிகாரி சிறப்பு அதிகாரியாகவும், மாவட்டந்தோறும் மாவட்ட கலெக்டர்கள் பிரசார தலைவர்களாக இருப்பார்கள்.

இந்த தகவல்கள் திட்டம் குறித்து அரசு வெளியிட்டுள்ள உத்தரவில் கூறப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்