ரேணுகாச்சார்யா எம்.எல்.ஏ. சகோதரர் மகன் இறப்பு குறித்து தீவிர விசாரணை
|ரேணுகாச்சார்யா எம்.எல்.ஏ. சகோதரரின் மகன் இறப்பு குறித்து 2 கோணங்களில் விசாரணை நடத்த போலீசாருக்கு உத்தரவிட்டு இருப்பதாக முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை கூறியுள்ளார்.
பெங்களூரு:
ரேணுகாச்சார்யா எம்.எல்.ஏ. சகோதரரின் மகன் இறப்பு குறித்து 2 கோணங்களில் விசாரணை நடத்த போலீசாருக்கு உத்தரவிட்டு இருப்பதாக முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை கூறியுள்ளார்.
முடிவுக்கு வரக்கூடாது
முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை நேற்று தாவணகெரே மாவட்டத்தில் சுற்றுப்பயணம் செய்தார். அங்கு ஹொன்னாளியில் உள்ள ரேணுகாச்சார்யா எம்.எல்.ஏ.வின் வீட்டிற்கு சென்ற அவர், அவரது சகோதரர் மகன் சந்திரசேகரின் உருவ படத்திற்கு அஞ்சலி செலுத்தினார். குடும்பத்தினருக்கு அவர் ஆறுதல் கூறினார். அதன் பிறகு பசவராஜ் பொம்மை நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது:-
எங்கள் கட்சியை சேர்ந்த ரேணுகாச்சார்யா எம்.எல்.ஏ.வின் சகோதரர் மகன் சந்திரசேகர் கடந்த சில நாட்களுக்கு முன்பு மர்மமான முறையில் உயிரிழந்துள்ளார். இந்த சம்பவத்தில் விசாரணை முடிவடையும் வரை, சரியான காரணம் தெரியவரும் வரை எந்த ஒரு முடிவுக்கும் வரக்கூடாது என்று போலீஸ் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளேன்.
2 கோணங்களில் விசாரணை
சந்திரசேகரின் சாவுக்கு 2 வகையான காரணங்கள் இருக்க வாய்ப்புள்ளது. அவரது பின்னணியை பார்க்கும்போது, அவர் கொலை செய்யப்பட்டு இருக்கலாம் என்ற சந்தேகம் எழுகிறது. காரின் நிலையை பார்க்கும்போது, அது விபத்தாக இருக்கலாம் என்று நினைக்க தோன்றுகிறது. இதில் எதையும் நீக்கிவிட்டு பார்க்க முடியாது. கொலையா?, விபத்தா? ஆகிய இந்த 2 கோணங்களிலும் விசாரணை நடத்தும்படி அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளேன்.சாவுக்கான காரணங்களை கண்டறிய போதுமான ஆதாரங்கள் தேவைப்படுகிறது. சந்திரசேகரின் உடல் பின்பக்க இருக்கைக்கு வந்தது எப்படி என்ற கேள்வியும் எழுகிறது. தலையில் முடிகள் உதிா்ந்தது, காரின் முன்பக்க கண்ணாடி உடைந்திருப்பது, பின்பக்க கண்ணாடிக்கு எந்த சேதமும் ஆகாமல் இருப்பது போன்றவை சந்தேகத்தை ஏற்படுத்துவதாக உள்ளன.
சேகரித்து விசாரணை
பிரேத பரிசோதனை அறிக்கை மற்றும் தடய அறிவியல் சோதனை அறிக்கை வர வேண்டும். சம்பவம் நடந்த இடத்தில் இருந்த காரின் பொருட்களை சேகரித்து விசாரணை நடத்தப்படுகிறது.
விசாரணை அறிக்கைகள் வந்த பிறகு அடுத்தக்கட்ட விசாரணை நடைபெறும். உடல் பிரேத பரிசோதனை அறிக்கை வந்த பிறகு அதன் அடிப்படையில் தனியாக விசாரணை குழுவை அமைப்பது குறித்து முடிவு எடுக்கப்படும்.
இவ்வாறு பசவராஜ் பொம்மை கூறினார்.