கிரகலட்சுமி திட்டத்தால் மாமியார்-மருமகள் சண்டை நடக்கும்; சி.எம்.இப்ராகிம் சொல்கிறார் கிண்டல்
|கிரகலட்சுமி திட்டத்தால் மாமியார்-மருமகள் இடையே சண்டை நடக்கும் என்று ஜனதாதளம் (எஸ்) கட்சி தலைவர் சி.எம்.இப்ராகிம் கூறியுள்ளார்.
பெங்களூரு:
கிரகலட்சுமி திட்டத்தால் மாமியார்-மருமகள் இடையே சண்டை நடக்கும் என்று ஜனதாதளம் (எஸ்) கட்சி தலைவர் சி.எம்.இப்ராகிம் கூறியுள்ளார்.
சி.எம்.இப்ராகிம் பேட்டி
ஜனதாதளம் (எஸ்) கட்சி தலைவர் சி.எம்.இப்ராகிம் பெங்களூருவில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
பா.ஜனதா கட்சி வாக்கு வங்கி அரசியலில் ஈடுபட்டு வருகிறது. மணிப்பூர் மாநிலம் பற்றி எரிகிறது. அதை பற்றி பா.ஜனதாவினர் பேசுவதில்லை. அங்கு சிறுமிகள் பலாத்காரம் செய்யப்படுகிறார்கள். ஆனால் இங்கு கல்லூரி கழிவறையில் கேமராக்கள் வைக்கப்பட்டு இருப்பதாக பேசுகிறார்கள்.
ேக.ஜி.ஹள்ளி, டி.ஜே.ஹள்ளி வழக்கு தொடர்பான தன்வீர்சேட் எம்.எல்.ஏ. கடிதம் குறித்து நீதி விசாரணை நடத்த வேண்டும். இரு பகுதிகளில் நடந்ததும் வகுப்புவாத கலவரம் அல்ல. இரு போதைப்பொருள் கடத்தல் கும்பல் இடையே நடந்த மோதல் தான். போதைப்பொருளை விற்பனை செய்ய முடியாத கும்பல் அப்போதைய எம்.எல்.ஏ. மற்றும் போலீஸ் நிலையத்திற்கு தீவைத்தது.
அப்பாவிகள் சிறையில் உள்ளனர்
இந்த சம்பவம் பற்றி அப்போதைய பா.ஜனதா அரசு என்.ஐ.ஏ. விசாரணைக்கு உத்தரவிட்டது. கொலை எதுவும் நடக்கவில்லை. இருப்பினும் என்.ஐ.ஏ. விசாரணைக்கு உத்தரவிட்டது ஏன்?. உப்பள்ளியில் போலீஸ் சூப்பிரண்டை திட்டியதாகவும் சிலர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த சம்பவங்கள் குறித்து நீதி விசாரணை நடத்த வேண்டும். தவறு என்று தெரியவந்தால், கைதானவர்களை தூக்கிலிடட்டும். ஆனால் இந்த சம்பவங்களில் அப்பாவிகள் பலர் சிறையில் உள்ளனர்.
முன்னாள் முதல்-மந்திரி குமாரசாமி வெளிநாட்டில் இருந்து கொண்டு ஆட்சியை கவிழ்க்க தயாராகிவிட்டார் என்று காங்கிரஸ் கூறுகிறது. இது உண்மையல்ல. இது யூகத்தின் அடிப்படையில் அக்கட்சி சொல்கிறது. காங்கிரஸ் கட்சிக்குள் பிரச்சினைகள் உள்ளது. இதனால் ஆட்சி நடத்த முடியாமல் அக்கட்சி திணறுகிறது. அதை மூடி முறைக்க ஆட்சி கலைப்பு பற்றி அக்கட்சியினர் கூறுகிறார்கள்.
மாமியார்-மருமகள் சண்டை
எங்கள் கட்சி பா.ஜனதாவுடன் கூட்டணி வைக்கவில்லை. பா.ஜனதா எந்த கட்சியுடனும் இணையவோ, கூட்டணி வைக்கவோ இல்லை என்று தேவேகவுடா கூறியுள்ளார். பெரிய கட்சியாக இருந்தும் பா.ஜனதாவால் இன்னும் கர்நாடக சட்டசபை எதிர்க்கட்சி தலைவரை தேர்வு செய்ய முடியாமல் உள்ளது.
இல்லத்தரசிகளுக்கு மாதம் ரூ.2 ஆயிரம் ஊக்கத்தொகை வழங்கும் கிரகலட்சுமி திட்டத்தை தொடங்கினால் குடும்பத்தில் மாமியார்-மருமகள் இடையே சண்டை நடக்கும். 200 யூனிட் இலவச மின்சாரம் வழங்குவதாக கூறி மின்கட்டணத்தை இரு மடங்காக இந்த அரசு உயர்த்திவிட்டது. இதனால் மக்கள் வீதிக்கு வந்து போராடும் நிலை உள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.