இந்திய அணியின் வெற்றி ஊர்வலம்: மும்பை போலீசாருக்கு முதல்-மந்திரியிடம் இருந்து பறந்த உத்தரவு
|இந்திய அணி வீரர்களின் வெற்றி பேரணி தொடங்கி நடைபெற்று வருகிறது.
மும்பை,
அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீசில் நடைபெற்ற டி20 உலகக்கோப்பை தொடரின் இறுதிப்போட்டியில் தென் ஆப்பிரிக்காவை 7 ரன் வித்தியாசத்தில் வீழ்த்தி இந்திய அணி சாம்பியன் பட்டத்தை வென்றது. இதன் மூலம் இந்திய அணி 17 வருடங்கள் கழித்து ரோகித் சர்மா தலைமையில் டி20 உலகக் கோப்பையை வென்றுள்ளது. பார்படாஸில் இருந்து இந்திய அணி வீரர்கள் தனி விமானம் மூலம் நேற்று இந்தியா புறப்பட்டனர்.
இந்த சூழலில் இன்று காலை இந்திய அணி வீரர்கள் டெல்லி வந்தடைந்தனர். கோப்பையுடன் நாடு திரும்பிய வீரர்களுக்கு உற்சாக வரவேற்பு அளிக்க ரசிகர்கள் அதிகாலை முதலே டெல்லி விமான நிலையம் வரத் துவங்கினர். இதனிடையே விமான நிலையம் வந்தடைந்த இந்திய அணியினருக்கு ரசிகர்கள் உற்சாக வரவேற்பை அளித்தனர். இதனையடுத்து இந்திய அணி வீரர்கள் டெல்லியில் இன்று பிரதமர் மோடியை சந்தித்தனர். உலகக்கோப்பையை வென்ற இந்திய அணி வீரர்களுக்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்தார்
இதனை தொடர்ந்து இன்று மாலை மும்பையில் இந்திய வீரர்கள் பேரணியாக, திறந்த வெளி பஸ்சில் டி20 உலகக்கோப்பையுடன் வலம் வருவார்கள் என தெரிவித்திருந்தது. இதனையடுத்து பேரணி நடைபெறும் இடத்தில் லட்சக்கணக்கான ரசிகர்கள் குவிந்துள்ளனர். மும்பையில் வெற்றிப்பேரணி நடைபெறும் மரைன் டிரைவ் பகுதியில் லட்சக்கணக்கான ரசிகர்கள் குவிந்துள்ளனர்.
இந்த சூழலில் இந்த வெற்றிப்பயணத்தில் பங்கேற்க வீரர்கள் மும்பை வந்துள்ளனர். தற்போது இந்திய வீரர்களின் வெற்றி பேரணி தொடங்கி உள்ளது. இந்திய அணி வீரர்களை கண்டதும் ரசிகர்கள் இந்தியா..இந்தியா.. என விண்ணை முட்டும் அளவுக்கு உற்சாகமாக கோஷம் எழுப்பி வருகின்றனர்.
இந்நிலையில் இந்த பெரும் ரசிகர் கூட்டத்தைப் பார்த்த மராட்டிய முதல்-மந்திரி ஏக்நாத் ஷிண்டே, எந்தவிதமான தவறான நடத்தைகளும் நடக்காமல் இருக்குமாறு மும்பை போலீஸ் கமிஷனருக்கு உத்தரவு பிறப்பித்துள்ளார்.
மேலும் மரைன் டிரைவ் மற்றும் வான்கடே ஸ்டேடியத்தில் கூடியிருக்கும் இந்திய கிரிக்கெட் ரசிகர்களுக்கு போக்குவரத்து சீராகவும், மக்களுக்கு சிரமம் ஏற்படாமல் இருப்பதை உறுதி செய்யுமாறும், மக்கள் கூட்டம் மற்றும் போக்குவரத்தை சரியான முறையில் நிர்வகிப்பதை உறுதி செய்யுமாறும் மும்பை போலீஸ் கமிஷனருக்கு ஏக்நாத் ஷிண்டே உத்தரவிட்டுள்ளதாக, முதல்-மந்திரி அலுவலகம் தெரிவித்துள்ளது.