< Back
தேசிய செய்திகள்
காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் கூட்டத்தில் நடந்தது என்ன?
தேசிய செய்திகள்

காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் கூட்டத்தில் நடந்தது என்ன?

தினத்தந்தி
|
16 May 2023 2:58 AM IST

விடிய, விடிய 8 மணி நேரம் நடந்த காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் கூட்டத்தில் நடந்தது என்ன என்ற பரபரப்பு தகவல்கள் வெளியாகியுள்ளது.

பெங்களூரு:

விடிய, விடிய 8 மணி நேரம் நடந்த காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் கூட்டத்தில் நடந்தது என்ன என்ற பரபரப்பு தகவல்கள் வெளியாகியுள்ளது.

முதல்-மந்திரி யார்?

கர்நாடக சட்டசபையை கைப்பற்றப்போவது யார் என்று கடந்த 6 மாதங்களாக நடந்து வந்த போர் முடிவுக்கு வந்துவிட்டது. காங்கிரஸ் கட்சி 135 இடங்களை கைப்பற்றி ஆட்சிக்கு வந்துவிட்டது. இருப்பினும் முதல்-மந்திரி பதவி யாருக்கு என்பதில் காங்கிரஸ் தலைவர்கள் டி.கே.சிவக்குமார், சித்தராமையா இடையே கடும் போட்டி நிலவியது. இதைத்தொடர்ந்து முதல்-மந்திரியை தேர்வு செய்ய நேற்று முன்தினம் மாலை 5.30 மணி அளவில் புதியதாக தேர்வு செய்யப்பட்ட காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்களின் கூட்டம் பெங்களூருவில் உள்ள ஓட்டலில் நடந்தது.

இதில் முதல்-மந்திரியை தேர்வு செய்ய காங்கிரஸ் மேலிடம் அமைத்த குழுவை சேர்ந்த மராட்டிய முதல்-மந்திரி சுஷில்குமார் ஷிண்டே, அகில இந்திய காங்கிரஸ் பொதுச்செயலாளர்கள் ஜிதேந்திர சிங், தீபக் பபாரியா ஆகியோர் தலைமையில் இந்த கூட்டம் நடந்தது. இதில் டி.கே.சிவக்குமார், ஒக்கலிக சமுதாய மக்கள் காங்கிரஸ் கட்சியை இந்த முறை ஆதரித்துள்ளனர். எனவே தனக்கு முதல்-மந்திரி பதவி வழங்க வேண்டும் என்று கூறினார். மேலும் சித்தராமையா- டி.கே.சிவக்குமாருக்கு தலா 2½ ஆண்டுகள் முதல்-மந்திரி பதவியை பகிர்ந்தளிக்கும் காங்கிரஸ் மேலிடத்தின் முடிவுக்கு அவர் ஆட்சேபனை தெரிவித்தார்.

எம்.எல்.ஏ.க்கள் ரகசிய ஓட்டெடுப்பு

அதுபோல் சித்தராமையா, புதியதாக தேர்வான எம்.எல்.ஏ.க்களின் ஆதரவு இருப்பவரை முதல்-மந்திரியாக ஆக்கும்படி வலியுறுத்தினார். சட்டசபை தேர்தலில் அதிரடியான வேலைகளை செய்து காங்கிரசின் வெற்றிக்குவித்திட்டவர் டி.கே.சிவக்குமார் என்பதாலும், மக்கள் ஆதரவு பெற்ற தலைவர் சித்தராமையா என்பதாலும் யாருக்கு முதல்-மந்திரி பதவி வழங்குவது என்பதில் காங்கிரஸ் மேலிட தலைவர்களுக்கு சிக்கல் ஏற்பட்டது.

இதைத்தொடர்ந்து அவர்கள் ஒவ்வொரு எம்.எல்.ஏ.வாக தனித்தனியாக அழைத்து கருத்துக்களை கேட்டனர். ஆனால் எம்.எல்.ஏ.க்கள் பகிரங்கமாக கருத்து கூற விரும்பவில்லை என்றனர். இதையடுத்து அவர்களின் கருத்துக்களை காகிதங்களில் எழுதி ஒரு பெட்டியில் போட்டனர். இந்த ரகசிய ஓட்டெடுப்பால் இந்த கூட்டம் நள்ளிரவை தாண்டி நடந்தது.

சிரித்த முகம்... இறுக்க முகம்

பின்னர் டி.கே.சிவக்குமாரும், சித்தராமையாவும் முதல்-மந்திரி பதவி விவகாரத்தில் கட்சி மேலிடம் முடிவுக்கு கட்டுப்படுவதாக கூறினர். இந்த கூட்டத்தில் விவாதிக்கப்பட்ட கருத்துக்கள், எம்.எல்.ஏ.க்கள் கூறிய கருத்துக்களை அறிக்கையாக தயாரித்த மேலிட பார்வையாளர்கள், அதனை நேற்று டெல்லிக்கு எடுத்துச் சென்று அகில இந்திய காங்கிரஸ் கட்சி தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, சோனியா காந்தி,ராகுல்காந்தியிடம் ஆலோசனை நடத்தி புதிய முதல்-மந்திரியை தேர்வு பற்றி விவாதித்தனர்.

பெங்களூருவில் நடந்த காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் அதிகாலை 1.30 மணி அளவில் நிறைவடைந்தது. கூட்டம் முடிந்து வெளியே வந்த டி.கே.சிவக்குமார் உற்சாகத்துடன் காணப்பட்டார். அவர் சிரித்த முகத்துடன் புறப்பட்டு சென்றார். சித்தராமையா கொஞ்சம் இறுக்கமாக முகத்தை வைத்திருந்தார். கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவு பற்றி நிருபர்கள் அவரிடம் கேள்வி எழுப்பினர். ஆனால் எந்த பதிலும் கூறாமல் சித்தராமையா அங்கிருந்து புறப்பட்டு சென்றார்.

பேட்டி

இதுகுறித்து காங்கிரஸ் கட்சியின் செயல்தலைவர் சதீஷ் ஜார்கிகோளி கூறுகையில், "முதல்-மந்திரி யார் என்பது பற்றி விவாதிக்கப்பட்டது. அனைத்து எம்.எல்.ஏ.க்களிடமும் தனித்தனியாக கருத்து கேட்கப்பட்டது. அதுபோல் நானும் எனது கருத்தை மேலிட பார்வையாளர்களிடம் தெரிவித்தேன். முதல்-மந்திரி யார் என்பதை மேலிடம் இறுதி செய்யும். அனைத்து எம்.எல்.ஏ.க்களும் மந்திரி பதவியை எதிர்பார்க்கிறார்கள். அதுபோல் எனக்கும் மந்திரி பதவி மீது ஆசை உள்ளது. கட்சி மேலிடம் என்ன முடிவு எடுக்கிறதோ அதுபடி செயல்படுவோம்" என்றார்.

இதுகுறித்து தமிழ்நாடு காங்கிரஸ் மேலிட பொறுப்பாளர் தினேஷ் குண்டுராவ் எம்.எல்.ஏ. கூறுகையில், "முதல்-மந்திரி யார் என்பது தொடர்பாக ஆலோசனை நடத்தினோம். எம்.எல்.ஏ.க்களிடம் தனித்தனியாக கருத்துக்கள் கேட்கப்பட்டுள்ளது. இந்த கருத்துக்கள் மேலிடத்திற்கு அனுப்பிவைக்கப்பட்டு உள்ளது. அதன்படி கட்சி மேலிடம் இறுதி முடிவு எடுக்கும்" என்றார்.

மற்றொரு எம்.எல்.ஏ.வும், காங்கிரஸ் மூத்த தலைவருமான செலுவராயசாமி நிருபர்களிடம் கூறுகையில், "அனைத்து எம்.எல்.ஏ.க்களும் மேலிட பார்வையாளர்களிடம் தங்களது கருத்துக்களை எடுத்து கூறியுள்ளனர். முதல்-மந்திரி யார் என்பது பற்றி மேலிடம் தான் முடிவு செய்ய இருக்கிறது" என்றார்.

மேலும் செய்திகள்