< Back
தேசிய செய்திகள்
பருவநிலை மாற்றத்தில் இருந்து பூமியை காக்க கார் வாங்க வேண்டாம் - காந்தியவாதி ஜி.ஜி பரிக்
தேசிய செய்திகள்

பருவநிலை மாற்றத்தில் இருந்து பூமியை காக்க கார் வாங்க வேண்டாம் - காந்தியவாதி ஜி.ஜி பரிக்

தினத்தந்தி
|
18 Sept 2023 12:50 AM IST

பருவநிலை மாற்றத்தில் இருந்து பூமியை காக்க கார் வாங்க வேண்டாம் என்று காந்தியவாதி ஜி.ஜி. பரிக் வேண்டுகோள் விடுத்து பேசினார்.

காந்தியவாதி

மும்பையில் " கிளைமேட் அக்சானீர் பிரைம்: எ பிகினர் டூல்கிட்" என்ற புத்தக வெளியீட்டு விழா நேற்று நடைபெற்றது. இந்த புத்தகம் ஆனந்த் பெண்டர்கர், ராகுல் பாலேகர் மற்றும் அம்ருதா பட்கோன்கர் ஆகியோரால் எழுதப்பட்டு உள்ளது. இந்த விழாவில் 99 வயதான காந்தியவாதி ஜி.ஜி. பரிக் கலந்துகொண்டார். நிகழ்ச்சியில் அவர் பேசியதாவது:- மாறிவரும் பருவநிலை மாற்றம் குறித்து அறிவியல் சமூகம் வழங்கும் கடுமையான எச்சரிக்கைகளை நாம் நம்ப வேண்டும்.

மகாத்மா காந்தி ஒரு உண்மையான சுற்றுச்சூழல் ஆர்வலர். சுதந்திரத்திற்கு முந்தைய காலத்தில் இந்தியாவின் மக்கள் தொகை 30 கோடியாக இருந்தது. காலனித்துவ சக்திகளை போல இங்குள்ள மக்கள் அனைவரும் நுகர்வு கலாசாரத்தை தொடங்கினால் சுற்றுச்சூழலில் ஏற்படும் அபாயம் பற்றி காந்தி அடிக்கடி கூறுவார்.

கார் வாங்க வேண்டாம்

பருவநிலை பிரச்சினையை இளைய தலைமுறையினர் முன்னெடுத்து செல்ல வேண்டும். பருவநிலை மாற்றத்தை தணிப்பதில் ஒருங்கிணைந்த முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும். கார் வாங்காதீர்கள் என்று நான் உங்களை கேட்டுக்கொள்கிறேன். நாம் அனைவரும் கார்களை வாங்க வேண்டாம் என்று முடிவு செய்தால் அதன்மூலம் நிறைய மாற்றங்கள் ஏற்படும். தனிப்பட்ட பயன்பாட்டிற்காக கார் வாங்குவது பல கவலையளிக்கும் அம்சங்களுக்கு மூல காரணமாக அமைகிறது. கார் பயன்பாடு குறைந்தால் மிகப்பெரிய சாலைகள் தேவைப்படாது. இவ்வாறு அவர் கூறினார்.

ஏழைகளுக்கு பாதிப்பு

அதேபோல நாடாளுமன்ற உறுப்பினர் வந்தனா சவான் இந்த நிகழ்ச்சியில் பேசும்போது, " பருவநிலை மாற்றத்தின் காரணமாக ஏழைகள் அதிகம் பாதிக்கப்படுகிறார்கள். இதில் அரசாங்கம் சில நடவடிக்கைகளை மேற்கொள்ள முடியும். இருப்பினும் இந்த நெருக்கடியை எதிர்த்து போராட நாம் ஒவ்வொருவரும் தனித்தனியாக முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும். இந்த புத்தகத்தை நான் வரவேற்கிறேன். இது பருவநிலை மாற்றம் குறித்து மக்களுக்கு கற்பிப்பதற்கான ஒரு கருவியாகும்" என்றார்.

மேலும் செய்திகள்