< Back
தேசிய செய்திகள்
தூய்மையான டெல்லியா? குப்பைகள் நிரம்பிய டெல்லியா? மக்கள் முடிவு செய்வார்கள்:  அமித்ஷாவுக்கு கெஜ்ரிவால் பதிலடி
தேசிய செய்திகள்

தூய்மையான டெல்லியா? குப்பைகள் நிரம்பிய டெல்லியா? மக்கள் முடிவு செய்வார்கள்: அமித்ஷாவுக்கு கெஜ்ரிவால் பதிலடி

தினத்தந்தி
|
20 Oct 2022 6:34 PM IST

தூய்மையான டெல்லி வேண்டுமா? அல்லது குப்பைகள் நிரம்பிய டெல்லி வேண்டுமா? என மக்கள் முடிவு செய்வார்கள் என்று அமித்ஷாவுக்கு கெஜ்ரிவால் பதிலடி கொடுத்து உள்ளார்.



புதுடெல்லி,


டெல்லியில் மாநகராட்சிக்கு உட்பட்ட தேக்கண்ட் பகுதியில் கழிவுகளில் இருந்து எரிசக்தி உற்பத்தி செய்வதற்கான ஆலை தொடக்க நிகழ்ச்சியில் மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா இன்று கலந்து கொண்டார்.

அவர் ஆலையை திறந்து வைத்து பேசும்போது, இந்த ஆலையானது நாள் ஒன்றுக்கு 2 ஆயிரம் மெகா டன் கழிவுபொருட்களை கையாளும் திறன் வாய்ந்தது. இதுதவிர, ஆலையில் இருந்து 25 மெகா வாட்ஸ் பசுமையாற்றலும் உற்பத்தி செய்யப்படும்.

இது ஒரு பன்முக பரிமாணம் மற்றும் பன்னோக்கு ஆலையாக செயல்படும் என கூறினார். தொடர்ந்து அவர், டெல்லி முதல்-மந்திரி கெஜ்ரிவால் தினசரி பத்திரிகைகளுக்கு அறிக்கைகளை தந்து கொண்டிருக்கிறார்.

பெரிய பெரிய விளம்பரங்களை வெளியிட்டு வருகிறார். பத்திரிகை பேட்டிகள் வளர்ச்சியை கொண்டு வரும் என அவர் நினைக்கிறார். விளம்பரங்களை வெளியிட்டு மக்களை தவறாக வழி நடத்தி விடலாம் என்றும் நினைத்து கொண்டிருக்கிறார்.

ஆம் ஆத்மி கட்சியானது டெல்லியை ஆம் ஆத்மி நிர்பார் ஆக்க விரும்புகிறது. அதேவேளையில் நாங்கள் டெல்லியை ஆத்மநிர்பார் ஆக்க விரும்புகிறோம்.

விளம்பரத்திற்கான (விக்யாபன்) அரசியலா அல்லது வளர்ச்சிக்கான (விகாஸ்) அரசியலா என டெல்லி மக்கள் முடிவு செய்ய வேண்டும். அவற்றுடன், பிரசாரத்திற்கான (பிரசார்) அரசியலா அல்லது மாற்றத்திற்கான (பரிவர்த்தன்) அரசியலா என்றும் டெல்லி மக்களே முடிவு செய்ய வேண்டும் என அமித்ஷா பேசினார்.

டெல்லி மாநகராட்சியில் பா.ஜ.க. ஆட்சிக்கு வந்ததும், குப்பைகளற்ற டெல்லி உருவாகும். 2025-ம் ஆண்டுக்குள் தினசரி கழிவு 100 சதவீதம் அகற்றப்படும் என்றும் அமித்ஷா உறுதி கூறினார்.

இதற்கு பதிலளிக்கும் வகையில் கெஜ்ரிவால் கூறும்போது, 15 ஆண்டுகளாக இதனை உங்களால் செய்ய முடியவில்லையா? தற்போது கூடுதலாக உங்களுக்கு 3 ஆண்டுகள் தேவையா? உங்களை மக்கள் ஏன் நம்ப வேண்டும்? என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

கெஜ்ரிவால் அரசு டெல்லியின் 3 நகராட்சி பகுதிகளுக்கு மாற்றாந்தாய் மனப்பான்மையுடன் நடந்து கொண்டது என மத்திய மந்திரி அமித்ஷா கூறிய குற்றச்சாட்டுக்கு பதிலளித்த கெஜ்ரிவால், மத்திய அரசு 15 ஆண்டுகளாக எவ்வளவு பணம் கொடுத்தது? அந்த இடங்களில் பா.ஜ.க. அரசு இல்லையா? இரட்டை என்ஜின் இல்லையா? உங்களது தோல்விக்கு மன்னிப்பு கோராதீர்கள்.

கடந்த 15 ஆண்டுகளில் என்ன பணி செய்தீர்கள் என மக்களிடம் கூறுங்கள். உங்களுக்கு நான் சவால் விடுக்கிறேன் என தெரிவித்து உள்ளார். குப்பைகளால் நிரம்பிய டெல்லி வேண்டுமா? அல்லது தூய்மையான டெல்லி வேண்டுமா? என்பது பற்றி மக்கள் முடிவு செய்ய வேண்டும் என கெஜ்ரிவால் கூறியுள்ளார்.

பா.ஜ.க. ஆட்சி செய்யும் நகராட்சி பகுதிகளில் ஊழல் நடந்துள்ளது என ஆம் ஆத்மி அரசு தொடர் குற்றச்சாட்டு கூறி வரும் நிலையில், அமித்ஷாவின் வருகைக்காக குப்பைகள் நிரம்பிய பகுதியில் எம்.எல்.ஏ. துர்கேஷ் பதக் தலைமையில் நூற்றுக்கணக்கான தொண்டர்கள் திரண்டிருந்தனர்.

மேலும் செய்திகள்