வகுப்பறையில் மோதல்.. காம்பசை ஆயுதமாக்கி 4ம் வகுப்பு மாணவனை 108 முறை குத்திய கொடூரம்
|தாக்குதலில் சிறுவனுக்கு வடுக்கள் ஏற்பட்டதாக பாதிக்கப்பட்ட சிறுவனின் தந்தை ஏரோட்ரோம் காவல் நிலையத்தில் புகார் தெரிவித்தார்.
இந்தூர்,
மத்திய பிரதேச மாநிலம் இந்தூரில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் நவம்பர் 24 ஆம் தேதி அன்று 4ம் வகுப்பு படிக்கும் மாணவர்களுக்கு இடையில் சண்டை நடந்திருக்கிறது. அதில் 3 மாணவர்கள் சேர்ந்து தன்னுடன் படிக்கும் மாணவனை காம்பஸ் மூலம் தாக்கியுள்ளனர்.
பின்னர் வீடு திரும்பிய மாணவனின் உடலில் இருக்கும் காயத்தை பார்த்த தந்தை அதிர்ச்சி அடைந்தார். அந்த சிறுவனிடம் கேட்டபோது தனது வகுப்பில் படிக்கும் மாணவர்கள் தன்னை தாக்கியதாக தந்தையிடம் கூறினான்.
இந்நிலையில் பதிக்கப்பட்ட சிறுவனின் தந்தை பள்ளிக்கு சென்று சிசிடிவி வீடியோவை கேட்டுள்ளார். அவர்கள் கொடுக்க மறுத்த நிலையில் ஏரோட்ரோம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
'புகார் அளிக்கப்பட்டதையடுத்து பாதிக்கப்பட்ட சிறுவனுக்கு மருத்துவப் பரிசோதனை நடத்தப்பட்டது. மேலும் சம்பவத்தில் ஈடுபட்ட அனைத்து குழந்தைகளும் 10 வயதுக்குட்பட்டவர்கள் என்பதால், சட்ட விதிகளின்படி உரிய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது' என காவல் உதவி ஆணையர் விவேக் சிங் சவுகான் தெரிவித்தார்.