உத்தர பிரதேசத்தில் 11-ம் வகுப்பு மாணவி கூட்டு பாலியல் வன்கொடுமை - 5 பேர் கைது
|மாணவி அளித்த புகாரின் பேரில் குற்றவாளிகள் 5 பேரையும் போலீசார் இன்று கைது செய்தனர்.
லக்னோ,
உத்தர பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த 11-ம் வகுப்பு படிக்கும் மாணவி ஒருவர் நேற்று மாலை பள்ளி முடிந்து வீடு திரும்பிக் கொண்டிருந்த போது, அந்த மாணவிக்கு பழக்கமான 2 நபர்கள் அவரை வீட்டில் கொண்டு போய் விடுவதாகக் கூறி இருசக்கர வாகனத்தில் அழைத்துச் சென்றுள்ளனர்.
ஆனால் அந்த மாணவியை ஆள் நடமாட்டமில்லாத இடத்திற்கு அழைத்துச் சென்று 2 பேரும் பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர். மேலும் அந்த இடத்திற்கு வந்த 3 பேர் அந்த மாணவியை கூட்டு பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர்.
பின்னர் அந்த மாணவியை இருசக்கர வாகனத்தில் அழைத்துச் சென்று வேறொரு இடத்தில் இறக்கிவிட்டுச் சென்றுள்ளனர். இந்த சம்பவம் குறித்து உடனடியாக அருகில் இருந்த காவல் நிலையத்தில் பாதிக்கப்பட்ட மாணவி புகார் அளித்துள்ளார்.
மாணவி அளித்த புகாரின் பேரில் குற்றவாளிகள் 5 பேரையும் போலீசார் இன்று கைது செய்தனர். அவர்கள் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும், பாதிக்கப்பட்ட மாணவி மீரட் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும் ஏ.எஸ்.பி. சாகர் ஜெயின் தெரிவித்துள்ளார்.