சிவமொக்காவில் இரு பிரிவினர் இடையே மோதல்; 5 பேருக்கு கத்திக்குத்து
|சிவமொக்காவில் இரு பிரிவினர் இடையே ஏற்பட்ட மோதலில் 5 பேருக்கு கத்திக்குத்து விழுந்துள்ளது. அவர்கள் ஆஸ்பத்திரியில் தீவிர சிகிச்சை பெற்று வருகிறார்கள்.
சிவமொக்கா-
சிவமொக்காவில் இரு பிரிவினர் இடையே ஏற்பட்ட மோதலில் 5 பேருக்கு கத்திக்குத்து விழுந்துள்ளது. அவர்கள் ஆஸ்பத்திரியில் தீவிர சிகிச்சை பெற்று வருகிறார்கள்.
முன்விரோதம்
சிவமொக்கா மாவட்டம் டவுன் ஆல்கொளா சதுக்கம் பகுதியை சேர்ந்தவர் பவன் (வயது 25). அதேப்பகுதியை சேர்ந்தவர் கிரண் (23). இவர்கள் 2 பேரும் நண்பர்கள் ஆவர். இந்தநிலையில் கடந்த 18-ந் தேதி விநாயகர் சதுர்த்தி பண்டிகையை ஆல்கொளா சதுக்கம் பகுதியில் பவன், கிரண் ஆகியோர் தனது நண்பர்களுடன் கொண்டாடினர்.
அப்போது அந்தப்பகுதியை சேர்ந்தவர்கள் விநாயகர் சிலைகள் வைத்து பூஜை செய்தனர். இதில் 100-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு விநாயகரை தரிசனம் செய்து கொண்டிருந்தனர். அப்போது பவன், கிரண் இடையே வாய்த்தகராறு ஏற்பட்டது. இந்தநிலையில், தகராறு முற்றி கைகலப்பு ஏற்பட்டது. இதனை அங்கிருந்தவர்கள் பார்த்து அவர்கள் 2 பேரையும் சமாதானம் செய்து அனுப்பி வைத்தனர்.
சமாதானம்
இந்தநிலையில், நேற்றுமுன்தினம் இரவு ஆல்கொளா சதுக்கம் எல்.ஐ.சி. கட்டிடம் அருகே பவன் அவரது நண்பர்களுடன் நின்று கொண்டு இருந்தார். அப்போது கிரண் தனது நண்பர்கள் 4 பேருடன் மோட்டார் சைக்கிளில் வந்தார். அவர்களை பவன் மற்றும் அவரது நண்பர்கள் வழிமறித்தனர்.
பின்னர் அவர்கள் ஒருவரை ஒருவர் தாக்கி கொண்டனர். இதில் தங்களிடம் இருந்த கத்தியை கொண்டு அவர்கள் குத்தி கொண்டனர். இந்த சம்பவத்தில் பவன், கிரண் உள்பட 5 பேரும் படுகாயம் அடைந்தனர்.
அவர்களை அக்கம் பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக சிவமொக்கா அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
விசாரணை
இதுகுறித்து துங்கா நகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். மேலும் இந்த சம்பவத்தில் தொடர்புடைய நபர்களையும் தேடி வருகிறார்கள்.