எல்லையில் இந்திய-சீன ராணுவ வீரர்களுக்கு இடையே ஏற்பட்ட மோதல் செயற்கைக்கோள் படம் - வீடியோ
|தவாங்கில் இந்திய-சீன ராணுவ வீரர்களுக்கு இடையே ஏற்பட்ட மோதலின் செயற்கைக்கோள் படம் மற்று வீடியோ வெளியாகியுள்ளது.
புதுடெல்லி
இந்தியாவின் எல்லைப்பகுதியைச் சீனா தொடர்ச்சியாக ஆக்கிரமிப்பு செய்ய முயன்று வருகிறது. இதனால் இருநாட்டு ராணுவ வீரர்களுக்கும் இடையே எப்போதும் பதற்றமான சூழ்நிலையே இருந்து வருகிறது.
இந்நிலையில், அருணாச்சல பிரதேச மாநிலம் தவாங் பகுதி அருகே உள்ள எல்லையில் சீன ராணுவ வீரர்கள் அத்துமீறி ஊடுருவி வேலி அமைத்தாக கூறப்படுகிறது. இதைப்பார்த்த இந்திய ராணுவ வீரர்கள், சீன ராணுவத்தின் ஊடுருவல் முயற்சியைத் தடுத்துள்ளனர்.17,000 அடி உயர சிகரத்தின் உச்சியை அடைய 300-க்கும் மேற்பட்ட சீன வீரர்கள் மேற்கொண்ட முயற்சி இந்திய ராணுவ வீரர்களால் முறியடிக்கப்பட்டது.
இதனால், இருநாட்டு வீரர்களுக்கும் இடையே மோதல் ஏற்பட்டுள்ளது. இதில் 6 இந்திய வீரர்கள் காயமடைந்ததாகவும் சீன தரப்பில் அதிகமானோர் படுகாயம் அடைந்துள்ளதாக இந்திய ராணுவம் தெரிவித்துள்ளது. இந்த சம்பவம் கடந்த 9ம் தேதி நடந்ததாகக் கூறப்படுகிறது.
இந்த பகுதியில் தற்போது பனிப்பொழிவு உள்ளது. சீன வீரர்கள் இந்திய எல்லையை உடைக்க விரும்பினர், ஆனால் இந்திய ராணுவ வீரர்கள் அந்த முயற்சியையும் முறியடித்தனர். எனினும், பின்னர் இரு நாட்டு வீரர்களும் இந்தப் பகுதியில் இருந்து வெளியேறினர்.
இந்த சம்பவத்தை அடுத்து தற்போது நடைபெற்று வரும் நாடாளுமன்ற கூட்டத் தொடரில் விவாதிக்க வேண்டும் என காங்கிரஸ், தி.மு.க உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் வலியுறுத்தி வருகின்றன.
அருணாச்சல பிரதேசத்தின் தவாங்கில் உள்ள யாங்சே பகுதியில் இந்திய ராணுவத்துக்கும், சீன ராணுவத்துக்கும் இடையே நடந்த மோதலின் செயற்கைக்கோள் படம் வெளியாகி உள்ளது.
தவாங் எல்லைக்கு அருகில் சீனா கிராமங்களை அமைத்திருப்பதை புகைப்படத்தில் காணலாம். அதுமட்டுமின்றி அந்தப் பக்கத்தில் சாலையையும் சீன ராணுவம் அமைத்துள்ளது. இது குறித்து இரு நாட்டு ராணுவங்களும் வெவ்வேறு கருத்துக்களை கூறி வருகின்றன.
கடந்த ஜூன் 15ம் தேதி கூட கல்வான் பள்ளத்தாக்கு பகுதியில் இரு நாட்டு ராணுவ வீரர்களுக்கு இடையே மோதல் ஏற்பட்டது. இதில் 20 இந்திய வீரர்கள் உயிரிழந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது அருணாச்சல பிரதேச எல்லைப்பகுதியில் சீன ராணும் ஊடுருவியுள்ளது.
அருணாச்சலப் பிரதேசத்தில் உள்ள உண்மையான கட்டுப்பாட்டுக் கோட்டுக்கு (எல்ஏசி) அருகில் சீன ஜெட் விமானங்கள் பறப்பதைக் கண்டதும் இந்திய விமானப்படை வான் ரோந்துப் பணியைத் தொடங்கியதாக ராணுவ வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.