திருவனந்தபுரத்தில் திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் தகராறு - 25 பேர் காயம்
|திருமண வரவேற்பு நிகழ்ச்சி வந்த நபர் மணப்பெண்ணின் தந்தையிடம் தகராறில் ஈடுபட்டதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
திருவனந்தபுரம்,
கேரள மாநிலம் திருவனந்தபுரம் அருகே பலராமபுரம் பகுதியில் உள்ள திருமண மண்டபம் ஒன்றில் திருமண வரவேற்பு நிகழ்ச்சி நடந்து கொண்டிருந்தது. அப்போது அந்த மண்டபத்திற்கு வந்த ஒருவர், தன்னை திருமணத்திற்கு அழைக்காதது ஏன் என்று மணமகளின் தந்தையிடம் கேட்டு தகராறு செய்துள்ளார்.
அந்த நபர் மணமகளின் பக்கத்து வீட்டுக்காரர் என்றும், அவருக்கும் மணமகளின் குடும்பத்திற்கும் ஏற்கனவே சில பிரச்சினைகள் இருந்து வந்ததாகவும் கூறப்படுகிறது. இந்த நிலையில் திருமண வரவேற்பு நிகழ்ச்சி வந்து அவர் மணப்பெண்ணின் தந்தையிடம் தகராறில் ஈடுபட்டதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
இதையடுத்து சிறிது நேரத்தில் வாக்குவாதம் தீவிரமடைந்து ஒரு கட்டத்தில் மோதலாக மாறியது. இருதரப்பைச் சேர்ந்தவர்களும் மாறி மாறி தாக்கிக் கொண்டதில் சுமார் 25 பேருக்கு காயம் ஏற்பட்டது. இது குறித்து தகவலறிந்து போலீசார் விரைந்து வந்து மோதலை தடுத்து நிறுத்தினர். இந்த மோதல் சம்பவம் தொடர்பான காட்சிகள் இணையத்தில் வைரலாக பரவி வருகின்றன.