கேரளா பீச்சில் இசை நிகழ்ச்சியில் மோதல்; 70 பேர் காயம்
|கேரளாவில் பீச் பகுதியில் நடந்த இசை நிகழ்ச்சியில் ஒருவருக்கு ஒருவர் மோதி கொண்டதில் 70 பேர் காயம் அடைந்தனர்.
கோழிக்கோடு,
கேரளாவின் கோழிக்கோடு பீச் பகுதியில் இஸ்லாம் கல்லூரி ஒன்றின் சார்பில் நிதி திரட்டும் நிகழ்ச்சி நடந்தது. இதற்காக இசை கச்சேரி ஒன்றும் நடைபெற்றது. ஆன்லைன் வழியேயும், சம்பவ பகுதியில் நேரடியாகவும் டிக்கெட்டுகள் விற்கப்பட்டு உள்ளன.
இதில் கலந்து கொள்ள திரளான கூட்டத்தினர் வந்துள்ளனர். ஆனால், குறைந்த அளவே மக்கள் கூடுவதற்கான இடவசதி இருந்துள்ளது. இதனால், பெருங்கூட்டத்திற்கு வசதியில்லாத சூழலில் ஒருவரை ஒருவர் தள்ளி கொண்டு பலர் உள்ளே நுழைய முயன்றுள்ளனர்.
இதில் அவர்களுக்குள் மோதல் ஏற்பட்டு உள்ளது. ஒரு சிலருக்கு மூச்சு விட சிரமம் ஏற்பட்டு, தரையில் சரிந்தனர். இந்த சம்பவத்தில் பொதுமக்கள் சிலர் கற்கள் மற்றும் மணலை அள்ளி போலீசார் மீது எறிந்துள்ளனர். இதனால், அவர்களை கலைக்க போலீசார் தடியடி நடத்தியுள்ளனர்.
இதனை தொடர்ந்து, கூட்டத்தில் இருந்தவர்கள் நாலாபுறமும் ஓடினர். இந்த சம்பவத்தில் மாணவர்கள், போலீசார் மற்றும் உள்ளூர்வாசிகள் உள்பட 70 பேர் வரை காயமடைந்து உள்ளனர்.
இதுபற்றி போலீசார் கூறும்போது, இந்த நிகழ்ச்சியின் ஒரு பகுதியாக கடைகளை அமைப்பதற்கே அனுமதி அளிக்கப்பட்டது. ஆனால், இசை நிகழ்ச்சி நடத்த அனுமதி எதுவும் அளிக்கப்படவில்லை என கூறியுள்ளனர். இதுபற்றி விசாரணை நடந்து வருகிறது.