திருப்பதியில் சாமி தரிசனத்திற்காக காத்திருந்த பக்தர்களிடையே மோதல்
|திருப்பதியில் சாமி தரிசனத்திற்காக காத்திருந்த பக்தர்கள் மோதலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
திருப்பதி,
திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு தினந்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகை தந்து சாமி தரிசனம் செய்து வருகின்றனர். தற்போது கோடை விடுமுறை என்பதால் கடந்த சில தினங்களாக திருப்பதியில் பக்தர்களின் கூட்டம் அதிகரித்து காணப்படுகிறது. இதனால் பொது தரிசனத்திற்கு வரும் பக்தர்கள் நீண்ட வரிசைகளில் காத்திருந்து ஏழுமலையானை தரிசனம் செய்கின்றனர்.
இந்த நிலையில் இன்று திருப்பதியில் பொது தரிசனத்திற்காக வரிசையில் காத்திருந்த பக்தர்களிடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இந்த வாக்குவாதம் சிறிது நேரத்தில் கைகலப்பாக மாறியது. இதனால் இருதரப்பினரும் ஒருவரை ஒருவர் தாக்கிக் கொண்டனர்.
இதையடுத்து தேவஸ்தான ஊழியர்கள் விரைந்து வந்து மோதலில் ஈடுபட்டவர்களை சமாதானம் செய்து, மீண்டும் அவர்களை வரிசையில் நிற்குமாறு அறிவுறுத்தினர். இது தொடர்பான வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் பரவி வருகின்றன. இந்த சம்பவத்தால் பொது தரிசன வரிசையில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.