பாடப்புத்தகத்தில் இருந்து அபுல்கலாம் ஆசாத் பெயர் 2013-ம் ஆண்டே நீக்கப்பட்டது - என்.சி.இ.ஆர்.டி. விளக்கம்
|11-ம் வகுப்பு பாடப்புத்தகத்தில் இருந்து மவுலானா அபுல்கலாம் ஆசாத் பெயர், 2013-ம் ஆண்டிலேயே நீக்கப்பட்டது என்று என்.சி.இ.ஆர்.டி. விளக்கம் அளித்துள்ளது.
புதுடெல்லி,
சி.பி.எஸ்.இ. பாடத்திட்ட புத்தகங்களை தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி கவுன்சில் (என்.சி.இ.ஆர்.டி.) உருவாக்குகிறது.
கடந்த ஆண்டு, பாடப்புத்தகங்களை என்.சி.இ.ஆர்.டி. மறுசீரமைப்பு செய்தது. பொருத்தமற்ற பாடப்பகுதிகளை நீக்கிவிட்டு, புத்தகங்களை புதிதாக அச்சிட்டது. ஆசிரியர்கள், மாணவர்கள் தெரிந்து கொள்வதற்காக, நீக்கப்பட்ட பாடப்பகுதிகளை ஒரு அறிவிப்பாணை மூலம் தெரிவித்தது.
ஆனால், அறிவிப்பாணை வெளியிடாமலேயே சில பாடப்பகுதிகளை என்.சி.இ.ஆர்.டி. நீக்கி இருப்பதாக புகார் எழுந்தது. அதில், 11-ம் வகுப்பு அரசியல் அறிவியல் பாடப்புத்தகத்தில், நாட்டின் முதலாவது கல்வி மந்திரி மவுலானா அபுல்கலாம் ஆசாத் பெயர் நீக்கப்பட்டதாக சர்ச்சை எழுந்தது.
கண்டனம்
அரசியல் நிர்ணய சபை கூட்டங்களுக்கு தலைமை தாங்கியவர்கள் பட்டியலில், மவுலானா ஆசாத் பெயர் விடுவிக்கப்பட்டதாக கூறப்பட்டது.
இதற்கு காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கண்டனம் தெரிவித்தன. வரலாற்றை மாற்றி எழுத மத்திய அரசு முயற்சிப்பதாக குற்றம் சாட்டின.
இந்நிலையில், இதற்கு என்.சி.இ.ஆர்.டி. மறுப்பு தெரிவித்துள்ளது. இதுகுறித்து அதன் உயர் அதிகாரி ஒருவர் கூறியதாவது:-
11-ம் வகுப்பு பாடப்புத்தகத்தின் முந்தைய பதிப்புகளை ஆய்வு செய்தபோது, குறிப்பிட்ட பத்தியில் மவுலானா ஆசாத் பெயர், 2014-2015 கல்வி ஆண்டில் இருந்தே இல்லை என்று கண்டறியப்பட்டது.
முடிச்சு போடக்கூடாது
அந்த கல்வி ஆண்டுக்கான பாடப்புத்தகங்களை அச்சிடுவதற்கு 2013-ம் ஆண்டு அக்டோபர் மாதம் இறுதி செய்யப்பட்டது. பதிப்பக பிரிவின் ஆவணங்களில் இந்த விவரம் இடம்பெற்றுள்ளது.
எனவே, மவுலானா ஆசாத் பெயர் நீக்கத்தை தற்போதைய பாடத்திட்ட மறுசீரமைப்புடன் முடிச்சு போடக்கூடாது என்று அவர் கூறினார்.
2013-ம் ஆண்டு, மத்தியில், மன்மோகன்சிங் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு பதவியில் இருந்தது.