< Back
தேசிய செய்திகள்
ஆட்டுப்பண்ணை அமைத்து தருவதாக கூறி வியாபாரிகளிடம் ரூ.3 லட்சம் மோசடி
தேசிய செய்திகள்

ஆட்டுப்பண்ணை அமைத்து தருவதாக கூறி வியாபாரிகளிடம் ரூ.3 லட்சம் மோசடி

தினத்தந்தி
|
21 Jun 2022 8:51 PM IST

ஆட்டுப்பண்ணை அமைத்து தருவதாக கூறி வியாபாரிகளிடம் ரூ.3 லட்சம் மோசடி செய்த கேரளாவை சேர்ந்தவரை போலீசார் கைது செய்தனர்.

மங்களூரு;

ஆட்டுப்பண்ணை அமைத்து தருவதாக...

தட்சிண கன்னடா மாவட்டம் மங்களூரு அருகே ஹம்பன்கட்டா பகுதியை சேர்ந்தவர்கள் விஜய், பிரெட்ரிக் பெராவ். வியாபாரிகளான இவர்கள் 2 பேரும் அதேப்பகுதியில் கடைகள் நடத்தி வருகின்றனர். இவர்களது கடைகளுக்கு கேரள மாநிலம் காசர்கோட்டை சேர்ந்த பென்னிச்சன் என்பவர் மசாலா பொடி, ஊறுகாய் போன்ற பொருள்களை வினியோகம் செய்து வந்துள்ளார்.

இதையடுத்து பென்னிச்சன், அவர்களிடம் தான் தாவணகெரேவில் ஆட்டுப்பண்ணை நடத்தி வருகிறேன். அதன் மூலம் நல்ல வருமானம் கிடைக்கிறது. அதனால் தங்களுக்கு விருப்பம் இருந்தால் தன்னுடைய நிலத்தில் ஆட்டுப்பண்ணை அமைத்து தருவதாகவும், நல்ல லாபம் கிடைக்கும் என்றும் கூறியுள்ளார்.

ரூ.3 லட்சம் மோசடி

இதை நம்பிய 2 பேரும் ஆட்டுப்பண்ணை அமைக்க விருப்பம் தெரிவித்துள்ளனர். இதையடுத்து பென்னிச்சன், அவர்கள் 2 பேரிடம் ஆட்டுப்பண்ணை அமைக்க ரூ.3 லட்சம் தரும்படி கேட்டுள்ளார். அதன்படி 2 பேரும் சேர்ந்து ரூ.3 லட்சத்தை பென்னிச்சனின் வங்கிக்கணக்கிற்கு செலுத்தியுள்ளனர். ஆனால் நீண்ட நாட்கள் ஆகியும் பென்னிச்சன் ஆட்டுப்பண்ணை அமைத்து கொடுக்கவில்லை.

இதுகுறித்து அவர்கள் பென்னிச்சனிடம் கேட்டபோது மழுப்பலான பதில்களை கூறிவந்துள்ளார். இதையடுத்து கொடுத்த பணத்தை திருப்பி தருமாறும் கேட்டுள்ளனர். ஆனால் அவர் பணத்தை திருப்பி கொடுக்கவில்லை.

அப்போது தான் 2 பேருக்கும், ஆட்டுப்பண்ணை அமைத்து தருவதாக கூறி பென்னிச்சன் பணம் மோசடி செய்தது தெரியவந்தது. இதுகுறித்து மோசடிக்கு ஆளான 2 பேரும் பந்தர் போலீசில் புகார் அளித்தனர். அந்த புகாரின் போில் வழக்குப்பதிவு செய்த போலீசார் பென்னிச்சனை கைது செய்து விசாரணை நடத்திவருகின்றனர்.

மேலும் செய்திகள்