தம்பதியின் அந்தரங்க வீடியோவை வெளியிடுவதாக மிரட்டல்: அரசு பணிக்கு தயாராகி வந்த வாலிபர் கைது
|ரூ.10 லட்சம் கேட்டு தம்பதியின் அந்தரங்க வீடியோவை வெளியிடுவதாக வாலிபர் மிரட்டல் விடுத்தார்.
சத்தீஷ்கார்,
சத்தீஷ்கார் மாநிலம் துர்க் மாவட்டம் அஹிவாரா டவுண் பகுதியில் வசித்து வந்தவர் வினய்குமார் சாகு வயது 28. பொறியியல் படிப்பை முடித்துவிட்டு பல்வேறு அரசுப் பணி தேர்வுகளுக்கு தயாராகி கொண்டிருந்தார். ஆனால் அவரால் ஒரு தேர்வில் கூட தேர்ச்சி பெற முடியவில்லை. இதனால் வினய்குமார் மனமுடைந்து விரக்தியில் காணப்பட்டார்.
இதையடுத்து தேவைகளைப் பூர்த்தி செய்வதற்காக திருட்டில் இறங்கினார். பின்னர் அவர் வசித்த பகுதியில் உள்ள வீடுகளில் செல்போன்கள் மற்றும் பிற பொருட்களை திருட தொடங்கினார். இந்த நிலையில், துர்க் மாவட்டத்தில் உள்ள தம்பதியின் வீட்டிற்கு சாகு திருட சென்றுள்ளார். ஆனால் அவர் அங்கு பொருட்களை திருடாமல், தம்பதி உல்லாசமாக இருந்ததை மறைந்திருந்து பார்த்து, தனது செல்போனில் வீடியோ எடுத்துக்கொண்டு அங்கிருந்து புறப்பட்டு சென்றார்.
இதையடுத்து கடந்த 17-ம் தேதி அந்த தம்பதியின் செல்போனுக்கு அவர்களின் அந்தரங்க வீடியோவை வினய்குமார் சாகு அனுப்பி, ரூ.10 லட்சம் கேட்டு மிரட்டியுள்ளார். பணத்தை தரவில்லை என்றால் வீடியோ இணையதளத்தில் வெளியிடுவேன் என்று மிரட்டியுள்ளார். இதைகேட்டு அதிர்ச்சி அடைந்த தம்பதி உடனே காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.
புகாரின் அடிப்படையில் நந்தினி பகுதி போலீசார் மற்றும் குற்றவியல் மற்றும் சைபர் பிரிவு போலீசார் சார்பில் குழு அமைக்கப்பட்டு விசாரணை நடத்தப்பட்டு வந்தது. அதனை தொடர்ந்து தம்பதிக்கு மிரட்டல் விடுத்த வாலிபரை போலீசார் கைது செய்தனர். அவரிடம் இருந்து 3 செல்போன்கள் மற்றும் சிம்கார்டுகள் ஆகியவற்றை பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.