< Back
தேசிய செய்திகள்
அனைத்து அம்சங்களையும் ஆராய்ந்த பிறகே குடியுரிமை சட்டத்திருத்தம் கொண்டுவரப்பட்டது:  மத்திய அரசு தகவல்
தேசிய செய்திகள்

அனைத்து அம்சங்களையும் ஆராய்ந்த பிறகே குடியுரிமை சட்டத்திருத்தம் கொண்டுவரப்பட்டது: மத்திய அரசு தகவல்

தினத்தந்தி
|
1 Nov 2022 4:48 AM IST

அனைத்து அம்சங்களையும் ஆராய்ந்த பிறகே குடியுரிமை சட்டத்திருத்தம் நாடாளுமன்றத்தில் கொண்டு வரப்பட்டதாக சுப்ரீம் கோர்ட்டில் மத்திய அரசு தெரிவித்துள்ளது.

புதுடெல்லி,

குடியுரிமை சட்டத்திருத்தத்துக்கு எதிராக இந்திய யூனியன் முஸ்லிம் லீக், காங்கிரஸ், தி.மு.க., தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகம், மக்கள் நீதி மய்யம் உள்ளிட்ட கட்சிகள் சார்பில் 232 ரிட் மனுக்கள் சுப்ரீம் கோர்ட்டில் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.

இந்த மனுக்கள் தொடர்பாக பதில் அளிக்க மத்திய அரசுக்கு சுப்ரீம் கோர்ட்டு கடந்த 2019-ம் ஆண்டு டிசம்பர் மாத இறுதியில் உத்தரவிட்டது.

மத்திய அரசு பதில் மனு

இதனையடுத்து மத்திய அரசின் உள்துறை அமைச்சகத்தின் சார்பில் சுப்ரீம் கோர்ட்டில் 1,217 பக்கங்கள் கொண்ட பதில் மனு தாக்கல் செய்யப்பட்டு உள்ளது.

அதில் கூறப்பட்டுள்ள முக்கிய அம்சங்கள் வருமாறு:-

கடந்த 2019-ம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்ட குடியுரிமை சட்டத்திருத்தம் குடிமக்களுக்கு ஏற்கனவே உள்ள உரிமைகளை பாதிக்கவில்லை. குடியேற்ற கொள்கை, குடியுரிமை, குடியேற்ற விலக்கு போன்றவை நாடாளுமன்ற அதிகார வரம்புக்குள் வருவதால், இவை தொடர்பாக பொதுநல மனுக்கள் கேள்விக்கு உட்படுத்த முடியாது.

வெளியுறவுக்கொள்கை, பொருளாதாரக்கொள்கை, குடியுரிமை போன்ற விவகாரங்கள் தொடர்பாக சட்டங்கள் இயற்றும் பரப்பு எல்லையை நாடாளுமன்றத்திற்கு சுப்ரீம் கோர்ட்டு வழங்கி உள்ளது.

அனைத்து அம்சங்களையும் ஆராய்ந்த பிறகே, நாடாளுமன்றத்தில் குடியுரிமைச் சட்டத்திருத்தம் கொண்டுவரப்பட்டுள்ளது.

இவ்வாறு அதில் கூறப்பட்டிருந்தது.

இலங்கை தமிழர்கள்

இந்த நிலையில் தலைமை நீதிபதி யு,யு.லலித் தலைமையிலான அமர்வு இந்த ரிட் மனுக்களை நேற்று மீண்டும் விசாரித்தது.

அப்போது மத்திய அரசின் சார்பில் ஆஜரான சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா, 'இந்த விவகாரம் தொடர்பாக மத்திய அரசு விரிவான பதில் மனு தாக்கல் செய்துள்ளது. அசாம், திரிபுரா தொடர்பாக பதில் மனு தாக்கல் செய்ய வேண்டியுள்ளது' என வாதிட்டார்.

தி.மு.க. சார்பில் மூத்த வக்கீல் பி.வில்சன் வாதிடுகையில், 'இந்த விவகாரத்தை அசாம், திரிபுரா மாநிலங்களுக்குள் மட்டும் சுருக்க முடியாது. 1983-ம் ஆண்டு தொடங்கி அகதிகளாக தமிழகத்தில் வசித்து வரும் இலங்கை தமிழர்களையும் இந்த விவகாரம் தொடர்புடையது.

அசாம், திரிபுரா தொடர்பாக மட்டுமே மத்திய அரசின் பதில் மனு அமைந்துள்ளது. ஆனால் இலங்கை தமிழர்கள் தொடர்பாக மத்திய அரசின் பதில் மனுவில் எதுவும் தெரிவிக்கப்படவில்லை' என்றார்.

டிசம்பர் 6-ந்தேதிக்கு தள்ளிவைப்பு

அனைத்து தரப்பு வாதங்களையும் பதிவு செய்து கொண்ட சுப்ரீம் கோர்ட்டு குடியுரிமை சட்டத்திருத்தத்துக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட ரிட் மனுக்கள் மீதான விசாரணையை டிசம்பர் 6-ந்தேதிக்கு தள்ளி வைத்ததுடன், ரிட் மனுக்கள் தொடர்பாக 3 வாரங்களுக்குள் பதில் அளிக்க அசாம், திரிபுரா அரசுகளுக்கு சுப்ரீம் கோர்ட்டு கூடுதல் அவகாசம் அளித்தது.

மேலும் செய்திகள்