போராட்டத்தில் குதித்த பொதுமக்கள்; தடியடி நடத்தி விரட்டிய போலீசார் - கேரளாவில் பரபரப்பு
|கோழிக்கோட்டில் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து போராடிய பொதுமக்களை போலீசார் தடியடி அடித்து விரட்டியதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
கோழிக்கோடு,
கேரள மாநிலம் கோழிக்கோட்டின் கடற்கரை பகுதியான அவிக்கல் பகுதியில் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் அமைக்க கேரள அரசு முடிவு செய்துள்ளது. இதனால் அந்த பகுதியில் நிலத்தடி நீரும், மண் வளமும் மாசடையும் எனக் கூறி பொதுமக்கள் தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகின்றனர்.
இந்த நிலையில், போராட்டத்தின் போது போலீசார் வைத்திருந்த தடுப்புகளை தூக்கி வீசி ஆர்பாட்டம் நடத்தினர். அப்போது சிலர் போலீசார் மீது கற்களை வீசி தாக்குதல் நடத்தியதால் போராட்டம் கலவரமாக மாறியது. இதனால் போலீசார் கண்ணீர் புகை குண்டுகளை வீசியும், தடியடி நடத்தியும் பொதுமக்களை அடித்து விரட்டினர். இதனால் அந்த பகுதி போர்க்களமாக மாறியது.
இதில் பொதுமக்கள் பலர் காயமடைந்தனர். போராட்டம் தொடர்பாக 10-க்கும் மேற்பட்டோரை போலீசார் கைது செய்துள்ளனர். அதே நேரத்தில் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையத்தால் பயனடைவோரே போலீசார் மீது தாக்குதல் நடத்தியதாக போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.
கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து போராடிய பொதுமக்களை போலீசார் தடியடி அடித்து விரட்டிய சம்பவம் கோழிக்கோட்டில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.