< Back
தேசிய செய்திகள்
சி.ஐ.எஸ்.எப். வீரருக்கு கன்னத்தில் அறை; விமான நிறுவன பெண் ஊழியர் கைது:  அதிர்ச்சி காரணம்
தேசிய செய்திகள்

சி.ஐ.எஸ்.எப். வீரருக்கு கன்னத்தில் அறை; விமான நிறுவன பெண் ஊழியர் கைது: அதிர்ச்சி காரணம்

தினத்தந்தி
|
12 July 2024 12:41 AM IST

சி.ஐ.எஸ்.எப். அதிகாரியின் பணி முடிந்ததும் அவரை, அவருடைய வீட்டுக்கு வந்து நேரில் சந்திக்கும்படி பெண் ஊழியரிடம் கூறியிருக்கிறார்.

ஜெய்ப்பூர்,

ராஜஸ்தானின் ஜெய்ப்பூர் விமான நிறுவனத்தில் விமான பணியாளர்களை சோதனை செய்வதற்காக தனியான பகுதி ஒன்று உள்ளது. இதில், தனியார் விமான நிறுவன பெண் ஊழியர் ஒருவரை, சோதனை செய்து கொண்டு விட்டு செல்லுங்கள் என மத்திய தொழில் பாதுகாப்பு படை (சி.ஐ.எஸ்.எப்.) அதிகாரி ஒருவர் கட்டாயப்படுத்தி உள்ளார்.

எனினும், அப்போது பெண் சி.ஐ.எஸ்.எப். அதிகாரி ஒருவர் கூட பணியில் இல்லை என்று கூறப்படுகிறது. இந்நிலையில், அந்த பெண் ஊழியர் ஆத்திரத்தில், பணியில் இருந்த ஆண் சி.ஐ.எஸ்.எப். அதிகாரியின் கன்னத்தில் அறைந்துள்ளார். இதுபற்றி பெண் ஊழியருக்கு எதிராக வழக்கு பதிவு செய்யப்பட்டு, அவர் கைது செய்யப்பட்டார்.

எனினும், அவருக்கு ஆதரவாக அந்த தனியார் விமான நிறுவனம் அறிக்கை ஒன்றை வெளியிட்டு உள்ளது. அதில், எங்களுடைய பெண் பாதுகாப்பு பணியாளர், முறையான விமான நிலைய நுழைவு அட்டையை தன்னுடன் வைத்திருந்துள்ளார்.

ஆனால் அவரிடம் தகாத மற்றும் ஏற்று கொள்ள முடியாத வகையில் அந்த அதிகாரி பேசியுள்ளார். அதிகாரியின் பணி முடிந்ததும் அவரை, அவருடைய வீட்டுக்கு வந்து நேரில் சந்திக்கும்படி பெண் ஊழியரிடம் கூறியிருக்கிறார்.

இது பாலியல் துன்புறுத்தல் வகையை சேர்ந்த தீவிர வழக்கு என குறிப்பிட்ட அந்நிறுவனம், உடனடியாக சட்ட நடவடிக்கை எடுக்க போகிறோம் என்று அறிவித்து உள்ளது. இதற்காக உள்ளூர் போலீசாரை அணுகியுள்ளோம். எங்கள் ஊழியருக்கு ஆதரவாக நாங்கள் உறுதியாக துணை நிற்போம். அவருக்கு முழு ஆதரவை அளிப்போம் என தெரிவித்து உள்ளது.

மேலும் செய்திகள்