அடுத்த 12 மணிநேரத்தில் தீவிர சூறாவளி புயலாக சித்ரங் வலுப்பெறும்: இந்திய வானிலை ஆய்வு மையம்
|அடுத்த 12 மணிநேரத்தில் தீவிர சூறாவளி புயலாக சித்ரங் வலுப்பெறும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது.
புதுடெல்லி,
இந்திய வானிலை ஆய்வு மையம் வெளியிட்டு உள்ள செய்தியில், சித்ரங் சூறாவளி புயல் ஆனது, சாகர் தீவு பகுதியில் இருந்து தெற்கே 430 கி.மீ. தொலைவிலும், பரிசால் பகுதியில் இருந்து 580 கி.மீ. தெற்கு-தென்மேற்கிலும் மையம் கொண்டுள்ளது.
இந்த புயல், அடுத்த 12 மணிநேரத்தில் தீவிர புயலாக வலுப்பெறும். வங்காளதேச கடலோரம் டின்கோனா தீவு மற்றும் சாண்ட்விப் பகுதிகளுக்கு இடையே நாளை அதிகாலை புயல் கரையை கடக்கும் என்று தெரிவித்து உள்ளது.
இந்த புயல், இன்று அதிகாலை 3.17 மணியளவில் மேற்கு வங்காளத்தின் சாகர் தீவு பகுதியில் இருந்து தெற்கே 520 கி.மீ. தொலைவிலும், வங்காளதேச நாட்டில் உள்ள பரிசால் பகுதியில் இருந்து 670 கி.மீ. தெற்கு-தென்மேற்கிலும் மையம் கொண்டிருந்தது என்றும் தெரிவிக்கப்பட்டது.
புயலை முன்னிட்டு இன்றும், நாளையும் வடக்கு வங்காள விரிகுடா பகுதியில் கடலுக்கு மீன்பிடிக்க செல்ல வேண்டாம் என அறிவுறுத்தலையும் வழங்கி உள்ளது. புயலானது, மேற்கு வங்காளத்தின் வடக்கு மற்றும் தெற்கு 24 பர்கானஸ் மற்றும் கிழக்கு மிட்னாப்பூர் மாவட்டங்களில் பாதிப்பு ஏற்படுத்த கூடும் என்றும் தெரிவித்து உள்ளது.