சித்ரதுர்கா; கல்லூரி மாணவி கற்பழித்து கொலை
|சித்ரதுர்காவில் கல்லூரி மாணவியை கற்பழித்து கொலை செய்த வாலிபரை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.
சித்ரதுர்கா-
சித்ரதுர்காவில் கல்லூரி மாணவியை கற்பழித்து கொலை செய்த வாலிபரை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.
இளம்பெண்
சித்ரதுர்கா (மாவட்டம்) தாலுகா ஹல்லூர் கிராமத்தை சேர்ந்த 19 வயது இளம்பெண் தனது குடும்பத்துடன் வசித்து வருகிறார். இவர் அப்பகுதியில் உள்ள தனியார் கல்லூரியில் 2-ம் ஆண்டு படித்து வந்தார். இந்தநிலையில் மாணவி கல்லூரிக்கு செல்லும்போது அதேப்பகுதியை சேர்ந்த அஜய் (வயது29) பேசி வந்துள்ளார். இதையடுத்து இருவரும் செல்போன் எண்களை பரிமாறி கொண்டு பேசி வந்தனர். மாணவியை அஜய் சித்ரதுர்கா, சிக்கமகளூரு உள்ளிட்ட பல இடங்களுக்கு அழைத்து சென்றுள்ளார்.
மேலும், வீட்டில் யாரும் இல்லாத நேரங்களில் மாணவி வீட்டிற்கு அடிக்கடி அஜய் சென்று வந்துள்ளார். அப்போது மாணவியை அவர் பலாத்காரம் செய்துள்ளார். இந்தநிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு மாணவி கல்லூரிக்கு சென்றார். அப்போது அந்த வழியாக ஆட்டோவில் அஜய் வந்தார்.
ஆட்டோவில் அழைத்து சென்றார்
பின்னர் மாணவியை சித்ரதுர்கா அருகே உள்ள கடலூர் கிராமத்தில் உள்ள வனப்பகுதிக்கு ஆட்டோவில் அவர் அழைத்து சென்றார். அங்கு வைத்து மாணவியிடம் ஆசைவார்த்தைகள் கூறி அஜய் கற்பழிக்க முயன்றார். ஆனால் மாணவி அதற்கு மறுப்பு தெரிவித்துள்ளார். இதையடுத்து, அஜய் மாணவியை வலுக்கட்டாயமாக கற்பழித்துள்ளார். இதில், அவர்கள் இடையே தகராறு ஏற்பட்டது.
இதையடுத்து அருகே கிடந்த கட்டையை எடுத்து அஜய் தாக்கியதில் மாணவி படுகாயம் அடைந்தார். பின்னர் மாணவியை சித்ரதுர்கா அரசு ஆஸ்பத்திரியில் அஜய் சேர்த்து விட்டு அங்கிருந்து சென்றார். இதுகுறித்து தகவல் அறிந்த மாணவியின் பெற்றோர் சித்ரதுர்கா அரசு ஆஸ்பத்திரிக்கு சென்றனர். அப்போது தனக்கு நடந்த கொடுமைகளை மாணவி பெற்றோரிடம் கூறினார்.
சாவு
இதனை கேட்டு அவர்கள் அதிர்ச்சி அடைந்தனர். இதையடுத்து மாணவியின் பெற்றோர் இதுகுறித்து சித்ரதுர்கா போலீசில் புகார் அளித்தனர். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து அஜயை தேடி வந்தனர். இந்தநிலையில், மாணவியை மேல் சிகிச்சைக்காக தாவணகெரே தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர்.
அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் மாணவி பரிதாபமாக இறந்தார். இந்தநிலையில், மாணவியின் உடல் பிரேத பரிசோதனை செய்யப்பட்டது. அதில், மாணவி கற்பழிக்கப்பட்டு இருந்தது தெரியவந்தது. இந்தநிலையில் இந்த வழக்கை கொலை வழக்காக மாற்றி ஆட்டோ டிரைவர் அஜயை போலீசார் தேடி வருகிறார்கள்.