தைவான் அதிபரை அமெரிக்க சபாநாயகர் சந்தித்தால் கடுமையான நடவடிக்கை - சீனா எச்சரிக்கை
|தைவான் அதிபரை அமெரிக்க சபாநாயகர் சந்தித்தால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று சீனா எச்சரிக்கை விடுத்துள்ளது.
பீஜிங்,
தைவான் அதிபர் சாய் இங் வென், தென்அமெரிக்க நாடுகளான கவுதமலா மற்றும் பெலிஸ் ஆகிய நாடுகளில் சுற்றுப்பயணம் மேற்கொள்ளவுள்ளார். தைவானில் இருந்து அந்த நாடுகளுக்கு நேரடியாக செல்ல இயலாது என்பதால், அமெரிக்காவுக்கு சென்று அங்கிருந்து பயணத்தை தொடர முடிவு செய்திருக்கிறார்.
அந்த வகையில் அதிபர் சாய் இங் வென் இன்று (வியாழக்கிழமை) அமெரிக்காவின் நியூயார்க் நகருக்கு செல்கிறார். அதே போல் அடுத்த மாதம் (ஏப்ரல்) 5-ந் தேதி தைவானுக்கு திரும்பும் போது, அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் இறங்கி பின்னர் தைவானுக்கு புறப்படுகிறார்.
அப்படி அவர் லாஸ் ஏஞ்சல்ஸ் வருகிறபோது அமெரிக்க சபாநாயகர் கெவின் மெக்கார்த்தி அவரை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்துவார் என தகவல்கள் வெளியாகி வருகின்றன. இதற்கு சீனா கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறது.
இதுகுறித்து சீன மந்திரி சபையின் தைவான் விவகார அலுவலகத்தின் செய்தி தொடர்பாளர் ஜு பெங்லியன் கூறுகையில், "தென் அமெரிக்காவில் உள்ள தூதரக கூட்டாளி நாடுகளுக்கு செல்லும் வழியில் சாய் இங் வென்னை எந்த அமெரிக்க அதிகாரிகளும் சந்திக்கக் கூடாது. நாங்கள் இதை உறுதியாக எதிர்க்கிறோம். அதையும் மீறி சந்தித்தால் உறுதியான எதிர் நடவடிக்கைகளை எடுப்போம். சாய் இங் வென்னின் போக்குவரத்து வருகைகளை ஏற்பாடு செய்வதிலிருந்தும் அமெரிக்க அதிகாரிகளுடன் தொடர்பு கொள்வதிலிருந்தும் அமெரிக்கா விலகி இருக்க வேண்டும்" என்றார்.
முன்னதாக கடந்த ஆண்டு ஆகஸ்டு மாதம் சீனாவின் கடும் எதிர்ப்பை மீறி அமெரிக்காவின் அப்போதைய நாடாளுமன்ற சபாநாயகர் நான்சி பெலோசி தைவானுக்கு சென்றதும், இதனால் ஆத்திரமடைந்த சீனா தைவானை சுற்றி வளைத்து கடுமையான போர் பயிற்சியில் ஈடுபட்டதும் நினைவுகூரத்தக்கது.