கொரோனா பலிகள் 80 சதவீதம் குறைந்து விட்டது: சீனா தகவல்
|கொரோனா பலிகள் 80 சதவீதம் குறைந்து விட்டதாக சீனா தெரிவித்துள்ளது.
பீஜிங்,
சீனாவில் தோன்றிய கொரோனா வைரஸ் பெருந்தொற்று உலக நாடுகளையெல்லாம் பாடாய்ப்படுத்தி விட்டது. தற்போது சீனாவில் 'ஜீரோ கோவிட் பாலிசி' என்ற பெயரில் விதிக்கப்பட்டிருந்த பொதுமுடக்கம், கட்டுப்பாடுகள் அகற்றப்பட்ட நிலையில் உருமாறிய கொரோனா அலை வீசுவதாக தகவல்கள் வெளிவந்தன. அந்த நாடு உண்மையான தகவல்களை வெளியிடுவதில்லை என்ற கருத்து சர்வதேச அளவில் எழுந்துள்ளது. உலக சுகாதார நிறுவனமும், சீனா உண்மையான தகவல்களை முழுமையாக வெளியிட வேண்டும் என்று வற்புறுத்தியது.
ஆனால் சீனாவில் கொரோனா தினசரி பலி எண்ணிக்கை, இந்த மாதத்தின் தொடக்கத்தில் இருந்து 80 சதவீத அளவுக்கு குறைந்து விட்டது என்று சீன அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
சீனா இறப்பின் ஒரு பகுதியை மட்டுமே கணக்கில் காட்டி வருகிறது என்று கூறப்படுகிறது. இதுபற்றி அமெரிக்காவின் சி.டி.சி. என்று அழைக்கப்படுகிற நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையம் கடந்த வாரம் கருத்து தெரிவித்தபோது, ஜனவரி 13-ந் தேதிக்கும், 19-ந் தேதிக்கும் இடையே 13 ஆயிரம் பேர் சீனாவில் இறந்துள்ளனர் என தெரிவித்தது.