< Back
தேசிய செய்திகள்
பிரதமர் மோடியின் அருணாசல பிரதேச பயணத்திற்கு எதிர்ப்பு தெரிவித்த சீனா; கடுமையாக நிராகரித்தது இந்தியா
தேசிய செய்திகள்

பிரதமர் மோடியின் அருணாசல பிரதேச பயணத்திற்கு எதிர்ப்பு தெரிவித்த சீனா; கடுமையாக நிராகரித்தது இந்தியா

தினத்தந்தி
|
12 March 2024 2:34 PM IST

அருணாசல பிரதேசம் முன்பும், இப்போதும் மற்றும் வருங்காலத்தில் என எப்போதும் இந்தியாவின் ஒருங்கிணைந்த மற்றும் பிரிக்கப்படாத பகுதியாகவே இருக்கும் என இந்தியா தெரிவித்து உள்ளது.

புதுடெல்லி,

அருணாசல பிரதேசத்தில் 13 ஆயிரம் அடி உயரத்தில் சீலா சுரங்கம் கட்டப்பட்டு உள்ளது. பிரதமர் மோடி கடந்த சனிக்கிழமை இதற்கான நிகழ்ச்சியில் கலந்து கொண்டு, அதனை நாட்டுக்கு அர்ப்பணித்து உள்ளார். சீன எல்லையையொட்டி, அருணாசல பிரதேசத்தில் உள்ள மேற்கு காமெங் மாவட்டத்தின் தவாங் பகுதியையும், அசாமின் தேஜ்பூர் நகரையும் இந்த சுரங்கம் இணைக்கிறது.

இந்த சூழலில், அருணாசல பிரதேசத்திற்கு பிரதமர் மோடி பயணம் மேற்கொண்டதற்கு சீனா எதிர்ப்பு தெரிவித்து உள்ளது. இதுபற்றி இந்தியாவுடன் நேற்று தூதரக அளவிலும் எதிர்ப்பை பதிவு செய்தது.

இந்நிலையில், சீனாவின் இந்த எதிர்ப்பு பற்றி மத்திய வெளிவிவகார அமைச்சகத்தின் செய்தி தொடர்பாளர் ரந்தீர் ஜெய்ஸ்வாலிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளித்து அவர் பேசும்போது, அருணாசல பிரதேசம் முன்பும், இப்போதும் மற்றும் வருங்காலத்தில் என எப்போதும் இந்தியாவின் ஒருங்கிணைந்த மற்றும் பிரிக்கப்படாத பகுதியாகவே இருக்கும்.

இதுபற்றி பல்வேறு தருணங்களில் சீன தரப்புக்கு தெரிவித்து விட்டோம் என கூறினார். இந்திய தலைவர்கள் பலர், பிற மாநிலங்களுக்கு செல்வது போன்று அவ்வப்போது அருணாசல பிரதேசத்திற்கு பயணம் செய்கின்றனர். இந்த பயணத்திற்கு எதிர்ப்பு தெரிவிப்பது அல்லது இந்தியாவின் வளர்ச்சி பணிகளை எதிர்ப்பது என்பது தெளிவற்றது.

இதனால், அருணாசல பிரதேசம் முன்பும், இப்போதும் மற்றும் வருங்காலத்தில் என எப்போதும் இந்தியாவின் ஒருங்கிணைந்த மற்றும் பிரிக்கப்படாத பகுதியாகவே இருக்கும் என்ற உண்மையில் மாற்றம் ஏற்படாது என்று கூறியுள்ளார்.

இந்தியாவின் அருணாசல பிரதேச மாநிலம், தெற்கு திபெத் என்று சீனாவால் கூறப்பட்டு வருகிறது. தொடர்ந்து, இந்திய தலைவர்களின் பயணத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. அந்த பகுதியை ஜாங்நன் என்றும் பெயரிட்டு உள்ளது.

மேலும் செய்திகள்