சீனாவில் கொரோனா தொற்று குறைந்ததால் வெளிநாட்டு பயணிகளுக்கு விசா..!!
|சீனாவில் கொரோனா தொற்று குறைந்துள்ளதால் வெளிநாட்டு பயணிகளுக்கு மீண்டும் விசா வழங்கும் பணி தொடங்கப்பட்டது.
பீஜிங்,
கொரோனா தொற்றில் இருந்து தங்களது நாட்டு மக்களை பாதுகாக்க ஒவ்வொரு நாடுகளும் ஊரடங்கு, வெளிநாட்டு பயணிகளுக்கு தடை உள்ளிட்ட பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்தன. கொரோனா பரவல் வெகுவாக குறைந்துள்ள நிலையில் சுற்றுலா வளர்ச்சி மற்றும் பொருளாதார நிலையை கருத்தில் கொண்டு தற்போது படிப்படியாக கொரோனா கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டு வருகின்றன.
அதன்படி தற்போது ஜப்பானில் முக கவசம் அணியாத திங்கட்கிழமை என்பது அறிமுகப்படுத்தப்பட்டு உள்ளது.
மீண்டும் விசா...
இந்த நிலையில் கொரோ னா வைரஸ் தோன்றியதாக கருதப்படும் சீனாவிலும் கொரோனா கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டு உள்ளன. அந்த நாட்டின் அரசாங்கம் இதுகுறித்து ஒரு அறிக்கையை வெளியிட்டு உள்ளது. அதன்படி புதிய பயண ஆவணங்கள் மதிப்பாய்வு செய்யப்பட்டு அங்கீகரிக்கப்படுவதோடு கடந்த 2020-ம் ஆண்டுக்கு முன்பு வழங்கப்பட்ட விசாக்களும் செல்லும் என அறிவிக்கப்பட்டு உள்ளது.
மேலும் வெளிநாட்டு பயணிகளுக்கு விசா வழங்குவதை மீண்டும் இன்று (புதன்கிழமை) சீனா தொடங்கி உள்ளது.
விசா இன்றி பயணம்
அதுமட்டுமின்றி ஹாங்காங், மக்காவ் போன்ற ஆசிய நாடுகளில் இருந்து கப்பல்கள் மூலம் வரும் பயணிகள் ஷாங்காய் நகரில் நிறுத்தப்பட்டு குவாங்டாங் மாகாணம் வழியாக விசா இல்லாமல் சீனாவுக்குள் அனுமதிக்கப்படுவார்கள் எனவும் அந்த அறிக்கையில் கூறப்பட்டு உள்ளது.
சீனாவில் குறைந்த செலவில் மருத்துவ படிப்புகளை படிக்கலாம் என்பதால் அங்கு இந்தியா உள்பட பல்வேறு நாடுகளில் இருந்து மாணவர்கள் சேருகின்றனர். இந்த நிலையில் சீன அரசாங்கத்தின் இந்த அறிவிப்பு பலரது வரவேற்பை பெற்றுள்ளது. மேலும் சீனாவின் இந்த முடிவு சுற்றுலா வளர்ச்சியிலும் பெரும்பங்கு வகிக்கும் என கருதப்படுகிறது.