< Back
தேசிய செய்திகள்
அருணாச்சலப் பிரதேசத்தை இணைத்து புதிய வரைபடத்தை வெளியிட்டது சீனா
தேசிய செய்திகள்

அருணாச்சலப் பிரதேசத்தை இணைத்து புதிய வரைபடத்தை வெளியிட்டது சீனா

தினத்தந்தி
|
29 Aug 2023 10:37 PM IST

இந்தியாவின் அருணாசலபிரதேசத்தை தங்கள் நாட்டின் பகுதியாக இணைத்து புதிய வரைபடத்தை சீனா வெளியிட்டுள்ளது. ஜி-20 மாநாட்டில் கலந்துகொள்ள சீன அதிபர் இந்தியா வரவுள்ள நிலையில் இந்த அடாவடியில் அந்த நாடு ஈடுபட்டுள்ளது.

சீனாவின் அத்துமீறல்

சீனா தனது எல்லையையொட்டிய இந்தியாவின் பல பகுதிகளை தனக்குச் சொந்தமானதாக உரிமை கொண்டாடிவருகிறது. குறிப்பாக, இந்தியாவின் வடகிழக்கு மாநிலங்களுள் ஒன்றான அருணாசலபிரதேசத்தை தங்கள் நாட்டின் தெற்கு திபெத் என்று சீனா கூறுகிறது. அதுதொடர்பான அத்துமீறல் செயல்களிலும் அவ்வப்போது ஈடுபட்டுவருகிறது. கடந்த ஏப்ரல் மாதம், அருணாசலபிரதேசத்தின் 11 இடங்களுக்கு புதிய பெயர்களை சீனா சூட்டியது. அதை இந்தியா முற்றிலுமாக நிராகரித்துவிட்டது.

புதிய வரைபடம்

இந்த நிலையில், அருணாசலபிரதேச மாநிலம், சர்ச்சைக்குரிய அக்சாய் சின் பகுதிகளை இணைத்து சீனாவின் புதிய வரைபடத்தை அந்த நாடு முன்தினம் வெளியிட்டது. தனிநாடான தைவான் மற்றும் பிரச்சினைக்குரிய தென்சீனக் கடல் பகுதி தீவுகளும் புதிய வரைபடத்தில் சீனாவுடன் சேர்க்கப்பட்டுள்ளன. கடந்த வாரம், தென்னாப்பிரிக்காவில் நடைபெற்ற பிரிக்ஸ் மாநாட்டின்போது இந்திய பிரதமர் நரேந்திர மோடி, சீன அதிபர் ஜி ஜின்பிங்குடன் சிறு உரையாடலை நிகழ்த்தினார். அதற்கு அடுத்தபடியாக, டெல்லியில் வருகிற செப்டம்பர் 9, 10-ந்தேதிகளில் நடைபெறும் ஜி-20 மாநாட்டில் சீன அதிபர் கலந்துகொள்ள உள்ளார். இந்நிலையில் இந்த அடாவடி நடவடிக்கையை அந்த நாடு மேற்கொண்டுள்ளது.

எதிர்ப்பை தெரிவிக்கும்விதமாக...

ஜி-20 மாநாட்டையொட்டி அருணாசலபிரதேசத்தில் இந்தியா நடத்திய நிகழ்வுகளுக்கு தனது எதிர்ப்பை தெரிவிக்கும்விதமாக சீனா இவ்வாறு புதிய வரைபடத்தை வெளியிட்டிருப்பதாக கருதப்படுகிறது. சீனாவின் நில அளவை மற்றும் வரைபட தயாரிப்பு விளம்பர தின கொண்டாட்டத்தையொட்டி இந்த வரைபடத்தை அந்நாட்டு இயற்கை வள அமைச்சகம் வெளியிட்டுள்ளது.

இந்தியா நிராகரிப்பு

இதுதொடர்பாக வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் அரிந்தம் பாக்சி வெளிட்டுள்ள எக்ஸ் பதிவில், 'சீனா இதுபோன்ற முயற்சியில் ஈடுபடுவது இது முதல்முறை அல்ல. இதை நாங்கள் திட்டவட்டமாக நிராகரிக்கிறோம். அருணாசலபிரதேசம் எப்போதும் இந்தியாவின் ஒருங்கிணைந்த, பிரிக்க முடியாத பகுதி. புதிதாக கண்டுபிடிக்கப்பட்ட பெயர்களை சூட்டுவதன் மூலம், உண்மையை மாற்றிவிட முடியாது' என்று கூறியுள்ளார். கடந்த 2020-ம் ஆண்டு கிழக்கு லடாக்கின் அசல் கட்டுப்பாட்டு கோட்டு பகுதியில் இந்தியா-சீனா ராணுவத்தினர் இடையே ஏற்பட்ட மோதலால் இரு தரப்பு உறவு வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளது. லடாக் எல்லைப்பகுதி பதற்றத்தை தணிக்கும்வகையில் இதுவரை 19 சுற்று பேச்சுவார்த்தைகள் நடத்தப்பட்டுள்ளன. இந்த நிலையில் பழைய சர்ச்சையை விசிறிவிடும் விதமாக அருணாசலபிரதேசத்தை இணைத்து புதிய வரைபடத்தை சீனா வெளியிட்டுள்ளது.

இந்தியா கடும் எதிர்ப்பு

வெளியுறவு அமைச்சக செய்தித்தொடர்பாளர் அரிந்தம் பாக்சி கூறுகையில், 'அருணாசலபிரதேசத்தை இணைத்து சீனா புதிய வரைபடத்தை வெளியிட்டிருப்பது, எல்லை விவகாரத்தை மேலும் சிக்கலாக்கவே செய்யும். இதுதொடர்பாக, சீனாவுக்கு ராஜதந்திர வழிகளில் நாம் நமது கடும் எதிர்ப்பை தெரிவித்துள்ளோம்' என்றார்.

மேலும் செய்திகள்