சிக்கலான பாதுகாப்பு சவால்களை சீனா எதிர்கொள்கிறது - அதிபர் ஜின்பிங் தகவல்
|சீனா அதிக சிக்கலான பாதுகாப்பு சவால்களை எதிர்கொள்வதாக கூறியுள்ள அதிபர் ஜின்பிங், எனவே எந்த சூழலையும் எதிர்கொள்ள தயாராக இருக்குமாறு ராணுவத்துக்கு எச்சரிக்கை விடுத்து உள்ளார்.
பீஜிங்,
தென் சீன கடல், தைவான் போன்ற சர்ச்சைக்குரிய பிராந்தியங்கள் தொடர்பாக அமெரிக்காவுக்கும், சீனாவுக்கும் இடையே மோதல் ஏற்பட்டு உள்ளது. இது சமீப காலமாக மோசமான சூழலை நோக்கி சென்று வருகிறது.
இதைப்போல உக்ரைன் போர் விவகாரத்தில் ஐரோப்பிய நாடுகளும் சீனாவை பகைத்து வருகின்றன. உக்ரைனில் இருந்து ரஷியாவை வெளியேறுமாறு சீனா அறிவுறுத்தாவிடில், சீனாவுக்கும், ஐரோப்பிய ஒன்றியத்துக்குமான உறவு மிகவும் மோசமாக பாதிக்கப்படும் என சமீபத்தில் ஐரோப்பிய ஒன்றிய வெளியுறவு அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
ஜின்பிங் எச்சரிக்கை
இந்த நிலையில் சீனாவின் தேசிய பாதுகாப்பு கமிஷன் கூட்டம் நேற்று முன்தினம் நடந்தது. இதை அதிபர் ஜின்பிங் தலைமையேற்று நடத்தினார்.
இந்த கூட்டத்தில் பேசும்போது, சீனாவுக்கு பாதுகாப்பு சவால் அதிகரிப்பதாகவும், எனவே எந்த சூழலையும் சந்திக்க தயாராக இருக்குமாறும் பாதுகாப்பு படையினருக்கு அவர் எச்சரிக்கை விடுத்தார்.
இது தொடர்பாக அவர் கூறியதாவது:-
தீவிரமான சூழ்நிலை
நாடு எதிர்கொள்ளும் தேசிய பாதுகாப்பு பிரச்சினைகளின் சிக்கலான தன்மை மற்றும் தீவிரத்தன்மை வியத்தகு அளவில் அதிகரித்து வருகிறது.
எனவே தேசிய பாதுகாப்பு முன்னணியானது பாதுகாப்பு வியூகங்கள் தொடர்பான தன்னம்பிக்கையை கட்டியெழுப்ப வேண்டும். வெற்றியைப் பெறுவதற்கு போதுமான நம்பிக்கையுடன் இருக்க வேண்டும். மேலும் நமது சொந்த பலம் மற்றும் நன்மைகள் பற்றி நன்கு அறிந்திருக்க வேண்டும்.
மோசமான மற்றும் தீவிரமான சூழ்நிலைகளுக்கு நாம் தயாராக இருக்க வேண்டும். மேலும் அதிகமான காற்று, கொந்தளிப்பான நீர் மற்றும் ஆபத்தான புயல்களின் பெரும் சோதனையை தாங்க தயாராக இருக்க வேண்டும்.
நடைமுறை சிக்கல்கள்
நமது தேசிய பாதுகாப்பு அமைப்பையும், அதன் திறனையும் நவீனமயமாக்க அதிக முயற்சிகள் மேற்கொள்ளப்பட வேண்டும். மேலும் உண்மையான போர் மற்றும் நடைமுறை சிக்கல்களை கையாளுவதற்கு தயாராக இருக்க வேண்டும் என்று ஜின்பிங் கூறினார்.
மேலும் இந்த கூட்டத்தில் நாட்டின் பாதுகாப்பை பலப்படுத்துவதற்கான வழிமுறைகள் குறித்து விவாதிக்கப்பட்டது. அத்துடன் தேசிய பாதுகாப்பு பற்றிய விரிவான பொதுக்கல்வியை வலுப்படுத்துவதற்கான வழிகாட்டுதல்களும் கூட்டத்தில் விவாதிக்கப்பட்டு ஏற்றுக்கொள்ளப்பட்டன.