< Back
தேசிய செய்திகள்
சீனாவில் தொற்று அதிகரிப்பு: கொரோனா குறித்து பதற்றம் தேவையில்லை - ஆதார் பூனவாலா
தேசிய செய்திகள்

சீனாவில் தொற்று அதிகரிப்பு: கொரோனா குறித்து "பதற்றம் தேவையில்லை" - ஆதார் பூனவாலா

தினத்தந்தி
|
21 Dec 2022 5:16 PM GMT

தற்போது பரவிவரும் கொரோனா குறித்து பதற்றம் தேவையில்லை என்று சீரம் தடுப்பூசி நிறுவன சி.இ.ஓ. ஆதார் பூனவாலா தெரிவித்துள்ளார்.

புதுடெல்லி,

சீனா, ஜப்பான், அமெரிக்கா, பிரேசில் உள்ளிட்ட நாடுகளில் கொரோனா பரவல் தற்போது திடீரென அதிகரித்து வருகிறது. இந்தியாவில் கொரோனா பரவாமல் தடுக்க மத்திய அரசு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது.

அந்தவகையில் மாநில அரசுகளை உஷார்படுத்தியுள்ள மத்திய அரசு, கொரோனா பரிசோதனைகளை அதிகரிக்க உத்தரவிட்டுள்ளது. இந்த சூழலில் இன்று டெல்லியில் மத்திய சுகாதாரத் துறை மந்திரி மன்சுக் மாண்டவியா தலைமையில், அவசர ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதில், சுகாதாரத் துறை செயலாளர்கள், இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கழகத்தின் தலைவர் ராஜிவ் பல், நிதி ஆயோக் (சுகாதாரம்) உறுப்பினர் வி.கே.பால், தொற்றுநோய்களுக்கான தேசிய தொழில்நுட்ப ஆலோசனைக் குழு தலைவர் என்.எல். அரோரா, உயிரிதொழில்நுட்ப துறை செயலாளர் ராஜேஷ் கோகலே, சீரம் நிறுவன தலைமை செயல் இயக்குனர் ஆதார் பூனவாலா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

இந்நிலையில் தற்போது பரவிவரும் கொரோனா குறித்து பதற்றம் தேவையில்லை என்று சீரம் தடுப்பூசி நிறுவன சி.இ.ஓ. ஆதார் பூனவாலா தெரிவித்தார். இது தொடர்பாக அவர் தனது டுவிட்டரில், "சீனாவில் கொரோனா தொற்று அதிகரித்து வருவது கவலை அளிக்கிறது. எனினும் நாம் அச்சம் கொள்ளத் தேவையில்லை. ஏனெனில், நாம் சிறப்பான முறையில் தடுப்பூசி பாதுகாப்பை பெற்றிருக்கிறோம். அதேநேரத்தில், மத்திய அரசும் சுகாதாரத் துறையும் வெளியிடும் வழிகாட்டு நெறிமுறைகளை நாம் கட்டாயம் பின்பற்ற வேண்டும்" என்று அதில் ஆதார் பூனவாலா பதிவிட்டுள்ளார்.

மேலும் செய்திகள்