மசூத் அசாரின் தம்பிக்கு எதிரான நடவடிக்கைக்கு சீனா முட்டுக்கட்டை : இந்தியா கண்டனம்
|ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் மசூத் அசாரின் தம்பியை சர்வதேச பயங்கரவாதியாக அறிவிக்கும் நடவடிக்கைக்கு சீனா முட்டுக்கட்டை போட்டுள்ளது. அதற்கு இந்தியா கண்டனம் தெரிவித்துள்ளது.
புதுடெல்லி,
ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் மசூத் அசாரின் தம்பியை சர்வதேச பயங்கரவாதியாக அறிவிக்கும் நடவடிக்கைக்கு சீனா முட்டுக்கட்டை போட்டுள்ளது. அதற்கு இந்தியா கண்டனம் தெரிவித்துள்ளது.
இந்தியா, அமெரிக்கா கூட்டு தீர்மானம்
பாகிஸ்தானை சேர்ந்த பயங்கரவாத இயக்கம் ஜெய்ஷ் இ முகமது. அதன் தலைவர் மசூத் அசாரை இந்தியாவின் வேண்டுகோளின்பேரில், கடந்த 2019-ம் ஆண்டு ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் 'சர்வதேச பயங்கரவாதி' என்று அறிவித்தது.
மசூத் அசார் மீது பொருளாதார தடையும் விதிக்கப்பட்டது.
மசூத் அசாரின் தம்பி அப்துல் ரவுப் அசார், ஜெய்ஷ் இ முகமது இயக்கத்தின் துணைத்தலைவராக இருக்கிறார். அவரை சர்வதேச பயங்கரவாதியாக அறிவிப்பதற்கான தீர்மானத்தை ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் இந்தியாவும், அமெரிக்காவும் கூட்டாக கொண்டு வந்தன.
அவர் மீது பொருளாதார தடை, ஆயுத தடை, பயண தடை விதிப்பதற்கும், சொத்துகளை முடக்குவதற்கும் இத்தீர்மானத்தில் வழிவகை செய்யப்பட்டு இருந்தது.
சீனா முட்டுக்கட்டை
ஆனால், சீனா தனது 'வீட்டோ' அதிகாரத்தை பயன்படுத்தி, அதற்கு முட்டுக்கட்டை போட்டுள்ளது.
சீனா இப்படி செய்வது இது முதல்முறை அல்ல. கடந்த ஜூன் மாதம், லஷ்கர் இ தொய்பா இயக்கத்தின் துணைத்தலைவர் அப்துல் ரகுமான் மக்கியை சர்வதேச பயங்கரவாதியாக அறிவிக்க இந்தியாவும், அமெரிக்காவும் மேற்கொண்ட முயற்சியையும் சீனா இதேபோல் முறியடித்தது.
இந்தியா கண்டனம்
இதற்கிடையே, சீனாவின் செயலுக்கு இந்தியா கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. இந்திய அரசு வட்டாரங்கள் கூறியதாவது:-
ஒவ்வொரு பாகிஸ்தான் பயங்கரவாதியையும் கருப்பு பட்டியலில் சேர்க்க முயற்சிக்கும்போதெல்லாம் சீனா அரசியல் உள்நோக்கத்துடன் முட்டுக்கட்டை போடுகிறது. இது, ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் பொருளாதார தடை குழு செயல்படும் முறையின் புனிதத்தன்மையை கெடுக்கிறது.
பொருளாதார தடை குழு தனது கடமையை செய்யவிடாமல் தடுக்கப்படுவது துரதிருஷ்டவசமானது. பயங்கரவாதத்தை எதிர்ப்பதில் சீனாவின் இரட்டை வேடத்தை இது அம்பலப்படுத்துகிறது.
இவ்வாறு அந்த வட்டாரங்கள் தெரிவித்தன.