ஆம்புலன்சில் இரட்டை குழந்தைகள் பெற்றெடுத்த பெண்
|மாலூர் அருகே ஆம்புலன்சில் ஒரே பிரசவத்தில் இரட்டை குழந்தைகளை பெண் ஒருவர் பெற்றெடுத்தார். மேலும் அவருக்கு பிரசவம் பார்த்த செவிலியர் மற்றும் அதற்கு உதவிய டிரைவருக்கு பாராட்டுகள் குவிகிறது.
கோலார் தங்கவயல்:
மாலூர் அருகே ஆம்புலன்சில் ஒரே பிரசவத்தில் இரட்டை குழந்தைகளை பெண் ஒருவர் பெற்றெடுத்தார். மேலும் அவருக்கு பிரசவம் பார்த்த செவிலியர் மற்றும் அதற்கு உதவிய டிரைவருக்கு பாராட்டுகள் குவிகிறது.
கர்ப்பிணி பெண்
கோலார் மாவட்டம் மாலூர் தாலுகா கனவனஹள்ளி கிராமத்தைச் சேர்ந்தவர் வெங்கடேஷ். கூலி தொழிலாளி. இவரது மனைவி சுஜாதா(வயது 23). சுஜாதா நிறைமாத கர்ப்பிணியாக இருந்தார். இந்நிலையில் நேற்று காலை அவருக்கு பிரசவ வலி ஏற்பட்டது. இது குறித்து வெங்கடேஷிற்கு தகவல் அளிக்கப்பட்டது. அவர் வேலை பார்த்து வந்த இடத்தில் இருந்து வீட்டிற்கு திரும்பினார். பின்னர் உறவினர்கள் உதவியுடன் மாலூர் அரசு ஆஸ்பத்திரிக்கு மனைவியை அழைத்து செல்ல முடிவு செய்தார்.
இதற்காக ஆம்புலன்சிற்கு அவர் அழைப்பு விடுத்தார். ஆனால் ஆம்புலன்ஸ் வருவதற்கு காலதாமதம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இருப்பினும் சில மணி நேரம் கழித்து ஆம்புலன்ஸ் வந்தது. அந்த ஆம்புலன்சில் சுஜாதாவை வெங்கடேஷ் அழைத்து சென்றார். பின்னர் மாலூர் ஆஸ்பத்திரியில் அவரை சேர்த்தார். அங்கு சுஜாதாவை பரிசோதனை செய்த டாக்டர்கள், ஆர்.எல்.ஜாலப்பா ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லும்படி கூறினர்.
இரட்டை குழந்தைகள்
இதையடுத்து வெங்கடேஷ், தனது மனைவியை ஆம்புலன்சில் அழைத்து சென்றார். ஆர்.எல்.ஜாலப்பா ஆஸ்பத்திரிக்கு செல்லும் வழியில் திடீரென்று அவருக்கு பிரவச வலி அதிகரித்தது. இதையடுத்து ஆம்புலன்ஸ் டிரைவர் கரியப்பா மற்றும் செவிலியர், வாகனத்தில் வைத்தே பிரசவம் பார்க்க முடிவு செய்தனர். அதன்படி ஆம்புலன்சை டிரைவர் சாலையோரம் நிறுத்தினார். பின்னர் செவிலியர், வெங்கடேசின் மனைவிக்கு பிரசவம் பார்த்தார். அதற்கு டிரைவர் கரியப்பா உதவிகள் செய்தார்.
இதையடுத்து நீண்ட நேர போராட்டத்திற்கு பின்னர் சுஜாதாவிற்கு அழகான இரட்டை பெண் குழந்தைகள் பிறந்தன. 2 குழந்தைகளும் சுக பிரசவத்தில் பிறந்ததாக கூறப்படுகிறது. தற்போது தாயும், சேயும் நலமாக உள்ளனர். இருப்பினும் தொடர்ந்து அவருக்கு ஆஸ்பத்திரியில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. ஆம்புலன்சில் இரட்டை குழந்தைகள் பிறந்த சம்பவம் சமூக வலைத்தளங்களில் வெளியாகி வைரலாகியது. இதை பார்த்த மக்கள், ஆம்புலன்ஸ் டிரைவர் கரியப்பா மற்றும் செவிலியரின் செயல்பாட்டிற்கு பாராட்டுகளை கூறியுள்ளனர்.