மகளை கவனிக்க முடியாவிட்டால் நானே வளர்த்திருப்பேன்; தந்தை கண்ணீர்
|4-வது மாடியில் இருந்து குழந்தையை வீசி தாய் கொன்ற விவகாரத்தில் கவனிக்க முடியாவிட்டால் நானே வளர்த்திருப்பேன் என்று குழந்தையின் தந்தை கண்ணீர் மல்க தெரிவித்தார்.
பெங்களூரு:
4-வது மாடியில் இருந்து குழந்தையை வீசி தாய் கொன்ற விவகாரத்தில் கவனிக்க முடியாவிட்டால் நானே வளர்த்திருப்பேன் என்று குழந்தையின் தந்தை கண்ணீர் மல்க தெரிவித்தார்.
குழந்தை கொலை
பெங்களூரு சம்பங்கிராம்நகர் போலீஸ் எல்லைக்கு உட்பட்ட அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வருபவர் கிரண். இவரது மனைவி சுஷ்மா. இந்த தம்பதிக்கு 4 வயதில் துருதி என்ற பெண் குழந்தை இருந்தது. கம்ப்யூட்டர் என்ஜினீயரான கிரண் தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார். சுஷ்மா பல் டாக்டர் ஆவார். இந்த நிலையில், சுஷ்மா தனது 4 வயது குழந்தை துருதியை அடுக்குமாடி குடியிருப்பின் 4-வது மாடியில் இருந்து கீழே வீசி கொடூரமாக கொலை செய்திருந்தார்.
கொலை செய்யப்பட்ட குழந்தை துருதி மனவளர்ச்சி குன்றிய நிலையில் சரியாக வாய் பேசாமல் இருந்ததால் மனம் உடைந்த சுஷ்மா தனது குழந்தையை 4-வது மாடியில் இருந்து வீசி கொலை செய்தது தெரியவந்துள்ளது. இதுகுறித்து சம்பங்கிராம்நகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து சுஷ்மாவை கைது செய்துள்ளனர். இந்த சம்பவம் தொடர்பாக மேலும் பல பரபரப்பு தகவல்கள் வெளியாகி உள்ளது.
6 ஆண்டுகளாக குழந்தை இல்லை
அதாவது கிரணுக்கும், உப்பள்ளியை சேர்ந்த சுஷ்மாவுக்கும் கடந்த 11 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்திருந்தது. திருமணமானதும் தம்பதி லண்டனுக்கு புறப்பட்டு சென்று விட்டனர். அங்கு ஒரு ஆண்டு தம்பதி வசித்து வந்துள்ளனர். அதன்பிறகு, அவர்கள் பெங்களூருவுக்கு வந்து சம்பங்கிராம்நகரில் அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வந்துள்ளனர். கிரணும் தனியார் நிறுவனத்தில் வேலை செய்திருக்கிறார். திருமணமான 6 ஆண்டுகளாக கிரண், சுஷ்மா தம்பதிக்கு குழந்தை இல்லாமல் இருந்துள்ளது.
இதற்காக 2 பேரும் பல்வேறு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்றுள்ளனர். அதன்பிறகு, 4 ஆண்டுக்கு முன்பு தான் சுஷ்மாவுக்கு பெண் குழந்தை பிறந்திருந்தது. 6 ஆண்டுகள் கழித்து பிறந்ததால் சுஷ்மா தனது குழந்தையை நன்கு கவனித்து வந்துள்ளார். ஆனால் குழந்தை மனவளர்ச்சி குன்றியபடி இருப்பது பற்றி 2 ஆண்டுக்கு முன்பு தான் தம்பதிக்கு தெரியவந்துள்ளது.
2 ஆண்டுகளாக சிகிச்சை
இதற்காக கடந்த 2 ஆண்டுகளாக பல்வேறு ஆஸ்பத்திரிகளில் குழந்தைக்கு சிகிச்சை அளித்து வந்துள்ளனர். ஆனாலும் குழந்தையின் உடல் நிலையில் எந்த விதமான முன்னேற்றமும் ஏற்படாமல் இருந்துள்ளது. இதன் காரணமாக மனம் உடைந்த சுஷ்மா, 6 ஆண்டுகள் கழித்து பிறந்த தனது குழந்தையை நினைத்து மிகுந்த வேதனை அடைந்ததாக கூறப்படுகிறது. குழந்தையை வளர்க்க விருப்பம் இல்லாமல் இருந்த அவர், கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு ரெயில் நிலையத்தில் விட்டு விட்டு வந்திருந்தார்.
பின்னர் கிரண் தான் ரெயில் நிலையத்திற்கு சென்று மீட்டு வந்திருந்தார். பின்னர் அவர் தனது குழந்தையை கொலை செய்ய திட்டமிட்டுள்ளார். அதன்படி, கடந்த 4-ந் தேதி மதியம் 3 மணியளவில் 4-வது மாடியில் இருந்து குழந்தையை கீழே வீசி சுஷ்மா கொலை செய்தது தெரியவந்துள்ளது. இந்த காட்சிகள் அங்குள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவாகி இருந்தது குறிப்பிடத்தக்கது.
நானே வளர்த்திருப்பேன்
இதற்கிடையில் தனது குழந்தை மீது கிரண் மிகுந்த அன்பு காட்டி வந்தது தெரியவந்தது. இதுபற்றி கிரண் கூறுகையில், 'எனது குழந்தையை நானே வளர்த்திருப்பேன். அவளுக்கு (மனைவி) கஷ்டமாக இருந்திருந்தால், என்னிடம் சொல்லி இருக்கலாம். எதுவும் அறியாத அந்த குழந்தையை கொலை செய்து விட்டாளே' என்று கண்ணீர் மல்க கூறினார்.
கைதான சுஷ்மா மீது கொலை வழக்குப்பதிவு செய்திருப்பதாகவும், விசாரணைக்கு பின்பு அவர் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளதாகவும் மத்திய மண்டல துணை போலீஸ் கமிஷனா் சீனிவாஸ் கவுடா தெரிவித்துள்ளார்.
தற்கொலை நாடகமாடிய சுஷ்மா
சுஷ்மா தனது குழந்தையை திட்டமிட்டு கொன்றதுடன், தற்கொலை நாடகமாடியதும் தெரியவந்துள்ளது. தனது குழந்தையை கொல்ல திட்டமிட்ட அவர் 4-வது மாடிக்கு அழைத்து சென்றுள்ளார். அங்கு யாரும் இல்லை என்பதை கவனித்துள்ளார். பின்னர் குழந்தை விளையாடும் போது, அதனை தூக்கி முதலில் கீழே வீச முயற்சித்துள்ளார். அதாவது 4 அடி உயரம் கொண்ட சுவரில் குழந்தையை வைத்துவிட்டு தூக்கி விட்டார். அதன்பிறகு, 2-வது முறையாக தான் அவர் கீழே வீசி இருந்தார். உடனடியாக காப்பாற்றும்படி கூறியதுடன், குடியிருப்பில் வசிப்பவர்கள் வந்ததும் தானும் கீழே குதித்து தற்கொலை செய்வது போல் நாடகமாடியதும், அவரை அங்கு வசித்தவர்கள் பிடித்ததும் தெரியவந்துள்ளது.