குழந்தை திருமண விவகாரம்; அசாமில் 11 வயது சிறுமி தாயாவது ஏற்கத்தக்கது அல்ல: முதல்-மந்திரி சர்மா பேச்சு
|குழந்தை திருமணங்களுக்கு எதிரான அதிரடி கைது நடவடிக்கையில் இந்து, முஸ்லிம்கள் சம விகிதத்தில் உள்ளனர் என அசாம் முதல்-மந்திரி சர்மா பேசியுள்ளார்.
கவுகாத்தி,
நமது நாட்டில் ஆண்களுக்கான குறைந்தபட்ச திருமண வயது 21, பெண்களுக்கான குறைந்தபட்ச திருமண வயது 18. இந்த வயதுக்கு கீழே உள்ள ஆண்கள், பெண்கள் திருமணம் செய்வது குழந்தை திருமணம் ஆகும். இந்த குழந்தை திருமணம் சட்ட விரோதம். அப்படி செய்வது தண்டனைக்குரிய குற்றம் ஆகும்.
அசாம் மாநிலத்தில் சட்ட விரோதமாக குழந்தை திருமணங்கள் நடைபெறுவது பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது. குழந்தை திருமணங்களை முடிவுக்கு கொண்டு வரும் வகையில் அதிரடி நடவடிக்கை எடுப்பது, குற்றவாளிகளை கைது செய்வது, விரிவான வகையில் விழிப்புணர்வு பிரசாரம் மேற்கொள்வது என்று கடந்த ஜனவரி 23-ந்தேதி முதல்-மந்திரி ஹிமந்தா பிஸ்வா சர்மா தலைமையில் கூடிய மாநில மந்திரிசபை முடிவு எடுத்தது.
இந்நிலையில், அசாமில் முதல்-மந்திரியின் உத்தரவை தொடர்ந்து, குழந்தை திருமணங்களுடன் தொடர்புடைய 2,170 பேர் அதிரடியாக கைது செய்யப்பட்டனர்.
குழந்தை திருமணங்கள் தொடர்பாக இதுவரை 4,074 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. கைது செய்யப்பட்டவர்களில் 52 பேர் திருமண சடங்குகளை நடத்திய சாமியார்கள் மற்றும் காஜிக்கள் ஆவர் என டி.ஜி.பி. தெரிவித்து உள்ளார். அவர்களில் பலர் தூப்ரி, பார்பேட்டா, கோக்ராஜர் மற்றும் விஸ்வநாத் மாவட்டங்களை சேர்ந்தவர்கள் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.
இந்த நிலையில், அசாம் சட்டசபையில் கவர்னர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் பேசிய முதல்-மந்திரி ஹிமந்தா பிஸ்வா சர்மா, தேசிய குடும்ப சுகாதார சர்வே 5-ன்படி, தூப்ரி மற்றும் சவுத் சல்மாரா பகுதிகளில் (முஸ்லிம்கள் பெரும்பான்மையாக உள்ள மாவட்டங்கள்) இந்த குழந்தை திருமண விவகாரங்கள் அதிகரித்து காணப்படுகின்றன. ஆனால், திப்ரூகார் மற்றும் தின்சுக்கியாவில் இதுபோன்று நிலைமை இல்லை.
காங்கிரஸ் ஆட்சி காலத்திலான தேசிய குடும்ப சுகாதார சர்வே 4-ன்படி, அசாமின் கீழ் பகுதி மாவட்டங்களில் (முஸ்லிம்கள் அதிக மக்கள் தொகை கொண்ட பகுதிகள்) திருமண வயது எட்டுவதற்கு முன்பே நடைபெறும் திருமணங்கள் மற்றும் குழந்தை திருமணங்கள் அதிக அளவில் இருந்தன என காட்டுகிறது.
எனினும், இந்த குழந்தை திருமணங்கள் விவகாரத்தில், கடந்த பிப்ரவரியில் இருந்து இதுவரையிலான அரசின் கைது நடவடிக்கையில், இந்துக்களும், முஸ்லிம்களும் சம விகிதத்தில் உள்ளனர். கைது செய்யப்பட்ட முஸ்லிம்கள் மற்றும் இந்துக்களின் விகிதம் 55:45 என்ற அளவில் உள்ளது என அவர் கூறியுள்ளார்.
எங்களது நிலைப்பாடு தெளிவாக உள்ளது. அசாம் மாநிலத்தில் சட்ட விரோத குழந்தை திருமணங்கள் நிறுத்தப்பட வேண்டும். இந்த குழந்தை திருமணங்களுக்கு எதிராக புதிய சட்டம் ஒன்றை கொண்டு வர ஆலோசனை நடத்தி வருகிறோம். 2026-ம் ஆண்டுக்குள் அந்த நடைமுறையை கொண்டு வர முயற்சித்து வருகிறோம்.
இதன்படி, சிறை தண்டனையை 2 ஆண்டுகள் என்பதில் இருந்து 10 ஆண்டுகள் என உயர்த்த ஆலோசிக்கப்படுகிறது. நாம் குற்றவாளிகளுக்காக அழுகிறோம். ஆனால், பாதிக்கப்படும் சிறுமிகளை கவனத்தில் கொள்வது இல்லை.
அசாமில் 11 வயது சிறுமி தாயாகிறாள். அது ஏற்று கொள்ள கூடியது அல்ல. அசாமில் சில எம்.எல்.ஏ.க்கள் கூட குற்றவாளிகளுக்கு ஆதரவாக பேசும் நிலையை பார்த்திருக்கிறேன் என்று அவர் கூறியுள்ளார்.