சிக்கமகளூரு மாவட்டத்தில் மழை, வெள்ளத்தால் ரூ.282 கோடி அளவுக்கு பாதிப்பு
|சிக்கமகளூரு மாவட்டத்தில் மழை, வெள்ளத்தால் ரூ.282 கோடி அளவுக்கு பாதிப்பு ஏற்பட்டு உள்ளதாக கலெக்டர் ரமேஷ் தெரிவித்துள்ளார்.
சிக்கமகளூரு;
சிக்கமகளூரு மாவட்ட கலெக்டர் ரமேஷ், நேற்று தனது அலுவலகத்தில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
சிக்கமகளூரு மாவட்டத்தில் கடந்த 2 மாதங்களாக தொடர்ந்து பெய்த கனமழையால் பெரிய அளவில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இந்த பாதிப்பு குறித்து ஆய்வு செய்து அறிக்கை தாக்கல் செய்ய அதிகாரிகளுக்கு உத்தரவிட்டேன். அதன்படி மழை வெள்ள பாதிப்புகள் குறித்து அதிகாரிகள் ஆய்வு செய்து அறிக்கை தாக்கல் செய்துள்ளனர்.
இதில் சிக்கமகளூரு மாவட்டத்தில் மழை வெள்ளத்தால் ரூ.282 கோடி அளவுக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது. மாவட்டத்தில் 6 பேர் கனமழைக்கு உயிரிழந்துள்ளனர். அவர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ.4 லட்சம் நிவாரணம் வழங்க ரூ.24 லட்சம் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. மாவட்டத்தில் மொத்தம் 17 வீடுகள் முற்றிலும் இடிந்து விழுந்துள்ளது. வீடுகளை இழந்து பாதிக்கப்பட்டவர்களுக்கு ரூ.4¾ லட்சம் நிவாரணம் வழங்கப்பட உள்ளது.
மேலும் சிக்கமகளூரு மாவட்டத்தில் 1,700 கிலோ மீட்டர் சாலைகள் சேதமடைந்துள்ளது. 2 பாலம் முற்றிலும் இடிந்து விழுந்துள்ளது. 2 பசுமாடுகள் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டு செத்துள்ளது. மேலும் விவசாய நிலங்களும் மழை வெள்ளத்தில் மூழ்கி நாசமாகி உள்ளன. இந்த அறிக்கை மாநில அரசுக்கு அனுப்பி வைக்கப்படும். பாதிக்கப்பட்டவர்களுக்கு விரைவில் நிவாரணம் வழங்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.