பாலியல் வழக்கில் கைதான மடாதிபதிக்கு 14ஆம் தேதி வரை நீதிமன்ற காவல்
|கர்நாடகாவில் பாலியல் வழக்கில் கைதாகி உள்ள மடாதிபதி சிவமூர்த்தி முருகா சரணருவுக்கு செப்., 14 ஆம் தேதி வரை நீதிமன்ற காவல் விதிக்கப்பட்டுள்ளது.
பெங்களூரு,
சித்ரதுர்காவில் உள்ள முருக மடத்தின் மடாதிபதியாக இருந்தவர் சிவமூர்த்தி முருகா சரணரு. இவரை பாலியல் வழக்கில் சித்ரதுர்கா புறநகர் போலீசார் கைது செய்து உள்ளனர். அவரை 3 நாட்கள் போலீசார் தங்களது காவலில் வைத்து விசாரிக்க சித்ரதுர்கா செசன்சு கோர்ட்டு உத்தரவிட்டு இருந்தது. அதன்படி மடாதிபதியை தங்களது காவலில் எடுத்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
மடாதிபதியின் ரத்தம், தலைமுடி, சிறுநீரும் தடய அறிவியல் ஆய்வுக்கு அனுப்பி வைக்கப்பட்டு உள்ளது. இதற்கிடையே நேற்று மடாதிபதி சிவமூர்த்தி முருகா சரணருவை சித்ரதுர்கா மடத்திற்கு போலீசார் அழைத்து சென்று சோதனை நடத்தினர். மடாதிபதி பயன்படுத்திய அறை, கழிவறை, அலுவலகம், கூட்டம் நடைபெறும் இடத்தில் சோதனை நடத்தப்பட்டு இருந்தது.
இந்த சோதனையின் போது மடாதிபதியிடம் போலீசார் சில கேள்விகளை கேட்டதாகவும், அதற்கு மடாதிபதி பதில் அளிக்கவில்லை என்றும் தகவல்கள் வெளியாகி உள்ளது. இந்த நிலையில் சிவமூர்த்தி முருகா சரணருவை போலீசார் மடத்திற்கு அழைத்து வந்திருப்பது பற்றி அறிந்ததும் 15-க்கும் மேற்பட்ட மடாதிபதிகள் முருக மடத்திற்கு சென்று சிவமூர்த்தி முருகா சரணருவை சந்தித்து ஆறுதல் கூறினர். அப்போது சிவமூர்த்தி முருகா சரணரு கண்ணீர்விட்டு அழுததாக கூறப்படுகிறது.
மேலும் மடத்தில் உள்ள பூஜை அறைக்கு சென்று அவர் சாமி தரிசனம் செய்ததாகவும், மடத்தின் ஊழியர்களுக்கு ஆசி வழங்கியதாகவும் கூறப்படுகிறது. முன்னதாக அசம்பாவித சம்பவங்களை தடுக்கும் வகையில் மடத்திற்கு வர பக்தர்களுக்கு தடை விதிக்கப்பட்டு இருந்தது. மேலும் மடத்தை சுற்றியுள்ள பகுதியில் 100-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர்.
மடத்தில் சோதனை முடிந்ததும் துணை போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்திற்கு மடாதிபதி அழைத்து செல்லப்பட்டார். அங்கு வைத்தும் மடாதிபதியிடம் விசாரணை அதிகாரி அனில், போலீஸ் சூப்பிரண்டு பரசுராம் ஆகியோர் விசாரணை நடத்தினர். அப்போதும் அவர் போலீசார் கேட்ட கேள்விகளுக்கு எந்த பதிலும் அளிக்காமல் மவுனமாக இருந்ததாக தகவல்கள் வெளியாகி உள்ளது. இந்த சூழலில் மடாதிபதியின் 3 நாட்கள் போலீஸ் காவல் இன்றுடன் (திங்கட்கிழமை) நிறைவு பெற்றது.
இந்த நிலையில் மடாதிபதியை இன்று காலை 11 மணிக்கு சித்ரதுர்கா செசன்சு கோர்ட்டில் போலீசார் ஆஜர்படுத்தினர். கோர்ட்டில் ஆஜர்படுத்திய பின்னர் மடாதிபதியை மீண்டும் தங்களது காவலில் வைத்து விசாரிக்க போலீசார் அனுமதி கேட்பார்கள் என்றும் தகவல்கள் வெளியாகி இருந்தது.
அதே நேரம் மடாதிபதியின் ஜாமீன் மனு மீதான விசாரணையும் இன்று நடைபெறும் என்றும், மடாதிபதியின் உடல்நலக்குறைவை காரணம் காட்டி அவருக்கு ஜாமீன் வழங்கவும் வாய்ப்பு இருப்பதாக கூறப்பட்டது.
இந்நிலையில் பாலியல் வழக்கில் கைதான மடாதிபதிக்கு 14 ஆம் தேதி வரை நீதிமன்ற காவல் விதித்து உத்தரவிடப்பட்டுள்ளது.